

சென்னை: "தமிழகத்தில் மாற்றத்துக்கான கட்சி இல்லை. திமுகவை விட்டால் அதிமுக, அதிமுகவை விட்டால் திமுகதான் எனப் பேசுவது ஏற்புடையது அல்ல" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: "நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 60 வேட்பாளர்களை கடத்தி, முன்மொழிந்தவரை மிரட்டுவது, அவர் உறுதியாக இருந்தால், வேட்பாளர்களை மிரட்டுவது என ஆளுங்கட்சியினர், நாம் தமிழர் கட்சியினரை பின்வாங்க செய்துவிட்டனர். பிறகு பணம் கொடுப்பது, பரிசுப் பொருட்கள் கொடுப்பது போக, வாக்குச்சாவடி மையத்தைக் கைப்பற்றி வாக்குச் செலுத்திவிடுவது, சென்னை மாநகராட்சியில் 200 இடங்களிலும் திமுகதான் வெல்லப்போகிறது, கவலைகொள்ளாமல் இருங்கள் என்று அமைச்சர்கள், தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்களிடம் பேசியிருப்பது தெரியவருகிறது.
திமுக ஆட்சிக்கு வந்தால் இதைத்தான் செய்வார்கள். ஆனாலும் ஊடகங்களுக்கு மிகப் பெரிய பொறுப்பும் கடமையும் இருப்பதாக நான் கருதுகிறேன். உண்மையான நேர்மையான அரசியல் உருவாக வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் இதற்கான தொடக்கத்தை செய்ய வேண்டும்.
பணம் இருப்பவர்கள்தான் அதிகாரத்துக்கு வரமுடியும், அதிகாரத்தைச் செலுத்தமுடியும் என்றால், முதலாளிகளுக்கான அதிகாரம் கட்டமைக்கப்படுமே தவிர, உழைக்கும் அடித்தட்டு மக்களுக்கான அதிகாரம் எங்கிருக்கும், பிறகு எப்படி இதை மக்களாட்சி என்று கூறுவது.
ஓட்டுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக ஊடகங்கள் விவாதிப்பது இல்லை. அப்படியென்றால், இந்த நிலை எப்போது ஒழியும். கள்ள ஒட்டு செலுத்துவது, ஆட்களை கடத்துவது, மிரட்டுவது இதற்கு ஏன் ஜனநாயகம் என்று பெயர் வைத்தனர். இதற்காகவா நம் முன்னோர்கள் சிறையில் அடைபட்டு வாடினர்.
தமிழகத்தில் மாற்றத்துக்கான கட்சி இல்லை. திமுகவை விட்டால் அதிமுக, அதிமுகவை விட்டால் திமுகதான் எனப் பேசுவது ஏற்புடையது அல்ல. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் திமுகவுக்கு வாக்களியுங்கள் என வாக்கு சேகரித்ததைவிட, சீமானுக்கும், நாம் தமிழருக்கும் வாக்களித்துவிட வேண்டாம் என திமுகவினர் கூறியதுதான் அதிகம். இது எந்தமாதிரியான அணுகுமுறை என்று பாருங்கள்.
பல இடங்களில் பாஜகவை எதிர்த்து திமுக போட்டியிடவே இல்லை. நாகர்கோயில், குளச்சலில் போட்டியிடவில்லை. அதிமுகவும் போட்டியிடவில்லை, திமுகவும் போட்டியிடவில்லை, பாஜகவுக்கு எதிராக நாம் தமிழர் கட்சிதான் போட்டியிடுகிறது. அப்படி என்றால், பாஜகவை திமுக எங்கே எதிர்க்கிறது?" என்று சீமான் கூறினார்.