கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கு: முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவுக்கு நிபந்தனை முன்ஜாமீன்

கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கு: முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவுக்கு நிபந்தனை முன்ஜாமீன்

Published on

சென்னை: கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணாநகரில் உள்ள தனது வீட்டில் ராஜா மற்றும் அமுதா ஆகிய இருவருடன் சேர்ந்து தன்னை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா மீது அவரது கணவர் ராமசாமி, ஜெ.ஜெ நகர் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், சசிகலா புஷ்பா உள்பட மூன்று பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், காவல் துறையினர் தன்னை கைது செய்யக்கூடும் என்பதால், முன்ஜாமீன் வழங்க கோரி முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், ’தொழில் சம்பந்தமாக என்னை சந்திக்க வந்த இருவரை, கரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் வீட்டில் தங்க அனுமதித்திருந்தேன். எனது கணவர் ராமசாமி தான், என்னை மிரட்டினார். எனக்கு எதிராக பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன் விசாரணைக்கு வந்தது. புலன் விசாரணை நிலுவையில் உள்ளதால் சசிகலா புஷ்பாவுக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது என காவல்துறை தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், ஜாமீனில் விடுதலை செய்யக் கூடிய பிரிவுகள்தான் எனக் கூறிய நீதிபதி, 25 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கான இருநபர் ஜாமீனிலும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அடுத்த 15 நாட்களுக்கு ஜெ.ஜெ நகர் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனவும், சாட்சிகளை கலைக்கக் கூடாது என்றும், தலைமறைவாகக் கூடாது என்றும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in