

சென்னை: வேதா நிலையம் இல்லத்தை அரசுடமையாக்குவதற்காக தமிழகஅரசு செலுத்திய ரூ.68 கோடி டெபாசிட் தொகையை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரி வித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றி தமிழக அரசுஉத்தரவிட்டது. அதற்கு ஏதுவாக சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு ரூ.68கோடியை டெபாசிட் செய்தது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகள் என ஜெ.தீபா, ஜெ.தீபக்கை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு அறிவி்த்தது. மேலும் மற்றொரு வழக்கில் வேதா நிலையம்இல்லத்தை அரசு கையகப்படுத்திய உத்தரவை ரத்து செய்து, உயர் நீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி கடந்தாண்டு தீர்ப்பளித்திருந்தார்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைஎதிர்த்து ஜெயலலிதா நினைவுஇல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், வேதா நிலையம் இல்லம் தொடர்பான வழக்கு, சென்னை பெருநகர 6-வது உரிமையியல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் சென்னை வருவாய் கோட்டாட்சியர் தாக்கல்செய்திருந்த மனுவில், ‘‘வேதா நிலையம் இல்லத்துக்காக தமிழகஅரசு, நீதிமன்றத்தில் செலுத்தியிருந்த ரூ.68 கோடி டெபாசிட் தொகையை திரும்பப்பெறவும், கையகப்படுத்தும் நடவடிக் கையைக் கைவிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என தெரி விக்கப்பட்டிருந்தது.
அதையடுத்து, இந்த வழக்கில் வருமானவரித் துறையின் விளக் கம் தேவைப்படுவதாகக் கூறி, வழக்கின் தீர்ப்பு நாளை (பிப்.18) வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.