Published : 17 Feb 2022 06:04 AM
Last Updated : 17 Feb 2022 06:04 AM

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் இன்று ஓய்கிறது; வார்டுகளில் இருந்து வெளியாட்கள் வெளியேற உத்தரவு

வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தவுள்ள எழுது பொருட்கள், மெழுகுவர்த்தி, அடையாள மை, படிவங்கள், கவர்கள் உள்ளிட்ட 81 பொருட்களை, வேலூர் மாநகராட்சி அலுவலத்தில் தனித்தனியாக பேக்கிங் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் | படம்: வி.எம்.மணிநாதன்

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. அதன்பிறகு அந்தந்த வார்டுகளில் இருந்து வாக்காளர் அல்லாத வெளியாட்கள் வெளியேற வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், தேர்தலை அமைதியாக நடத்துவது குறித்தும் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது.

இந்த தேர்தலில் 2 கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க உள்ளனர். தமிழகம் முழுவதும் மொத்தம் 74 ஆயிரத்து 416 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. பரிசீலனையின்போது பல்வேறு காரணங்களுக்காக 2 ஆயிரத்து 62 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 14 ஆயிரத்து 324 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொண்டனர். 218 பதவிகளுக்கு போட்டியின்றி வேட் பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சி 8-வது வார்டில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதுதவிர காஞ்சிபுரம் மாநகராட்சி, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சிகளில் வேட்பாளர்கள் மரணம் காரணமாக தொடர்புடைய வார்டுகளில் மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது 12 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பதவிகளுக்கு மொத்தம் 57 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகளின்படி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் ஏனைய பிரச்சாரங்கள் அனைத்தையும் வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்தில் இருந்து 48 மணி நேரத்துக்கு முன்பாக முடிக்க வேண்டும். அதன்படி, இன்று (பிப்.17) மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. இதையடுத்து, வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக உள்ளனர். இறுதி நாளான இன்று வேட்பாளர்கள் திறந்த வாகனங்களில் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரிக்க திட்டமிட்டுள்ளனர். இதனால், பிரச்சார களம் இன்று அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வெளியாட்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் தங்கி தேர்தல் பணி மற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை 6 மணிக்கு பிறகு, தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பில் வாக்காளர் அல்லாத, வெளியிலிருந்து அழைத்து வரப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், கட்சித் தொண்டர்கள் அனைவரும் அந்த பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும். அவ்வாறு வெளியேறாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் கடைசி நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் விநியோகிக்கப்படலாம் என்பதால் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதிக அளவில் புகார்கள் வர வாய்ப்புள்ளதால் பறக்கும் படைகளின் எண்ணிக்கையை உயர்த்துமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, சென்னையில் ஏற்கெனவே 45 பறக்கும் படை குழுக்கள் கண்காணித்து வந்த நிலையில், கூடுதலாக 45 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டுள்ளன.

தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட் டுள்ளன. மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பகுதிகளில் போலீஸார் கொடி அணிவகுப்பும் நடத்தினர். தேர்தல் நடக்கும் பகுதிகள் மற்றும் அதைச் சுற்றி 5 கி.மீ. வரையுள்ள பகுதிகளில் இன்று முதல் 19-ம் தேதி வரை மதுக்கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக தேர்தல் நடக்கும் பகுதிகளில் 19-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், அடையாள மை, வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வார்டு வாரியாக பிரதான மற்றும் துணை வாக்காளர் பட்டியல்கள், வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் 268 வாக்கு எண்ணும் மையங்கள் குறித்த விவரங்கள் மாநில தேர்தல் ஆணையத்தின் https://tnsec.tn.nic.in/ என்ற இணையதளத்தில் வெளி யிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

இதனிடையே வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை அமைதியாக நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தலைமையில் நடந்த கூட்டத்தில், தேர்தல் ஆணைய செயலர் எ.சுந்தரவல்லி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாநகர காவல் ஆணையர்கள் சங்கர் ஜிவால் (சென்னை), எம்.ரவி (தாம்பரம்), சந்தீப் ராய் ரத்தோர் (ஆவடி), காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம்-ஒழுங்கு) பி.தாமரைக்கண்ணன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.ராகுல்நாத், தேர்தல் பார்வையாளர் மகேஸ்வரி ரவிக்குமார், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், தேர்தல் பார்வையாளர் பி.கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் போலீஸார் நேற்று
இருசக்கர வாகனங்களில் அணிவகுத்து சென்றனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்வது, பறக்கும் படைகளின் கண்காணிப்பு, வாக்குச்சாவடி பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், பதற்றமான மற்றும் மிக பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் 22-ம் தேதி 268 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ள நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட் டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் காவல்துறை அதிகாரி களிடம் மாநில தேர்தல் ஆணையர் கேட்டறிந்தார்.

500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக, சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 500 சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளதாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேலை, கல்வி உள்ளிட்ட காரணங்களால் லட்சக்கணக்கான மக்கள் சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற நகரங்களில் வசித்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் சொந்த ஊர்களில்தான் வாக்குரிமை வைத்திருப்பார்கள். தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடப்பதால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகங்கள் முடிவு செய்துள்ளன.

இது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் பேருந்துகளில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். சனிக்கிழமை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடப்பதால் இந்த வெள்ளிக்கிழமை மேலும் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்யலாம் என்று எதிர்பார்க்கிறோம். அதனால் வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரம் பேருந்துகளுடன், கூடுதலாக 500 சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளோம்.

தற்போதுவரை அரசு விரைவுப் பேருந்துகளில் பெரிய அளவில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும், பொதுமக்கள் கடைசிநேரத்தில் அதிக அளவில் பயணம் செய்வார்கள் என்பதால், இன்றுமுதல் தேவைக்கு ஏற்றாற்போல கூடுதல் பேருந்துகளை இயக்க உள்ளோம்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x