Published : 17 Feb 2022 09:01 AM
Last Updated : 17 Feb 2022 09:01 AM
சென்னை: வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை, அதிகநீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டிய அவசியம் தற்போது இல்லைஎன்று கூறி, வழக்கு விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள வன்னியர் சமுதாயத்துக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கிதமிழக அரசு கொண்டு வந்த சட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று கூறி, அதை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மற்றும் பாமக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதேபோல, இடஒதுக்கீட்டை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது.
தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, வன்னியர் சமுதாயத்துக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு என்பது ஏற்கெனவே உள்ள இடஒதுக்கீட்டைத் தாண்டி கொடுக்கப்படவில்லை. உள் இடஒதுக்கீடா கத்தான் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டு முறை அமலில்உள்ளது. தற்போதும் அம்பாசங்கர்அறிக்கை மற்றும் வீடுதோறும் சென்று சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி, பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கொடுத்த அறிக்கையின் அடிப்படையிலேயே இந்த 10.5 சதவீத உள் ஒதுக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த சட்டமீறலும் இல்லை. இதற்கு சட்டப் பாதுகாப்பும் உள்ளது.
ஆனால், இதை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. ஏற்கெனவே 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான அமர்வு 5 நீதிபதிகள் அடங்கிய பெரிய அமர்வில்நிலுவையில் இருப்பதால், இந்தவிவகாரம் தொடர்பான வழக்கையும் அதே அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவில் வன்னியர் சமூகத்தை தவிர வேறு யாருக்கும் உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதா அல்லது இது தொடர்பாக கோரிக்கைகளோ, பரிந்துரைகளோ வந்துள்ளதா என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு தமிழக அரசு தரப்பில், வேறு எந்த சமூகத்துக்கும் இந்தஉள் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. வன்னியர் சமூகம் அதிகமாக உள்ளதால் அவர்களுக்கு இந்த உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. பாமக தரப்பில் மூத்த வழக்கறிஞர் எம்.என்.ராவ் ஆஜராகி, எதற்காக வன்னியர் சமுதாயத்துக்கு இந்த உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக விளக்கினார்.
எனினும், எதிர் மனுதாரர்கள்தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், வன்னியர்களுக்கு மட்டுமான இந்த 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு நடைமுறை அடிப்படையிலேயே தவறானது. இதில் சட்ட விதிமீறல்கள் உள்ளன என்றுகடுமையாக ஆட்சேபம் தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கை தற்போதுள்ள இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வுதான் விசாரிக்கவேண்டும். அரசியல் சாசனஅமர்வுக்கு மாற்றத் தேவையில்லை என்றும் வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பான பிற தீர்ப்புகளையும் முழுமையாக படித்துவிட்டதாகவும், எனவே இந்த வழக்கை தற்போதைய சூழலில் அதிக நீதிபதிகள் அடங்கிய பெரிய அமர்வுக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும், இந்த வழக்கின் சட்டப்பூர்வ அம்சங்களை எடுத்துவைத்து அனைத்து தரப்பு வழக்கறிஞர்களும் முதலில் வாதிடட்டும். பிறகு இந்த வழக்கை அதிக நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதா, வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம் எனறு கூறி, விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT