

ஓட்டுக்குப் பணம் கொடுக்க வந்தால் அடித்து விரட்டுங்கள் என தேமுதிக மகளிரணி தலைவி பிரேமலதா தெரிவித்தார்.
தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக மகளிரணி தலைவி பிரேமலதா திருச்சி மாவட்டத்தில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது புலிவலம், அய்யம்பாளையம், கருமண்டபம், தென்னூர் உள்ளிட்ட இடங்களில் அவர் பேசியதாவது:
அதிமுக, திமுக இரண்டும் ஊழல் கட்சிகள். இவர்கள் மாறிமாறி ஆட்சி செய்து, தமிழகத்தை அழிவுப்பாதையை நோக்கி கொண்டு சென்றுள்ளனர். இவர்களிடமிருந்து தமிழகத்தை மீட்க, மக்கள் இம்முறை தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களுக்கு சாலை, குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம், பள்ளிக்கூடம் என எந்த வசதியும் இல்லை. ஆனால், ஊருக்கு ஊர் மதுபானக் கடைகள் உள்ளன.
டாஸ்மாக் கடைகள் இல்லாத தமிழகத்தை எங்கள் கூட்டணி நிச்சயம் கொண்டு வரும்.
ஆனால், திமுக, அதிமுகவால் அவ்வாறு செய்ய முடியாது. காரணம், இங்குள்ள மதுபான ஆலைகளின் முதலாளிகளே அவர்கள்தான். முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் மதுபான ஆலைகளை நடத்துகின்றன.
இந்த இரு கட்சிகளும் மக்களை அடிமைகளாக்கவும், முட்டாளாக்கவும், ஏமாற்றவுமே பணம் கொடுக்கின்றனர் என்பதை வாக்காளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்க வந்தால் அடித்து விரட்டுங்கள். அப்போதுதான் அவர்களுக்கு புத்தி வரும்.
இத்தேர்தலில் ஜெயலலிதா, கருணாநிதிக்கு ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்புங்கள். தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியின் ஆட்சி அமைய ஒவ்வொரு தொண்டரும் பாடுபட வேண்டும் என்றார் பிரேமலதா.