Published : 17 Feb 2022 09:48 AM
Last Updated : 17 Feb 2022 09:48 AM

திமுகவுக்கு வாக்களிக்காவிட்டால் 5 ஆண்டுகளுக்கு வாணியம்பாடி புறக்கணிக்கப்படும்: தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் துரைமுருகன் சர்ச்சை பேச்சு

வாணியம்பாடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்.

வாணியம்பாடி: திமுகவுக்கு வாக்களிக்காவிட்டால் வாணியம்பாடி நகர மக்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு புறக்கணிக்கப்படுவீர்கள் என மிரட்டல் தொனியில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பொதுக் கூட்டத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திமுக கூட்டணி கட்சி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக நீர்வளத் துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வாணியம்பாடி நகராட்சியில் 36 வார்டுகள், உதயேந்திரம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அமைச்சர் துரைமுருகன் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாவது:

மத்திய அரசு மாற்றான் தாய்மனப்பான்மையுடன் செயல்படுகிறது. அதை பற்றி எங்களுக்கு கவலையில்லை. வரும் மார்ச் மாதம் நிதிநிலை அறிக்கை வெளியாகிறது. இதில், திமுக தேர்தலின்போது கூறிய வாக்குறுதிகள் வரிசையாக நிறைவேற்றப்படும் அதற்கான அறிவிப்பு வெளியாகும்.

கிருஷ்ணகிரி அணையில் இருந்தும், சாத்தனூர் அணையில் இருந்தும் பல நூறு டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. அதைபாலாற்றுக்கு திருப்பி விட நடவடிக்கை எடுக்கப்படும். தென்பெண்ணை-பாலாறு இணைப்பு திட்டம் 4 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.

தமிழக அரசின் திட்டங்கள் உங்களுக்கு வந்து சேர வேண்டும்என்றால் திமுகவை ஆதரிக்க வேண்டும். கிணற்றில் உள்ள தண்ணீர் வயலுக்கு சீராக செல்ல வேண்டுமென்றால் வாய்க்கால் அவசியம். அதைப்போலத்தான்தமிழக அரசின் திட்டம் மக்களுக்கு சென்று சேர திமுக உறுப்பினர்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட வேண்டும்.

வாணியம்பாடி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நீங்கள் (பொதுமக்கள்) திமுக உறுப்பினர்களை தேர்வு செய்தால் வாணியம்பாடி நகராட்சி சிறப்படையும். இல்லை என்றால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு வாணியம்பாடி நகராட்சி புறக்கணிப்படும். எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற்றால் ஜீரணிக்கமுடியாது. ஆளும் திமுக கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அனைத்து நன்மையும் நடக்கும்என்றார். மிரட்டல் தொனியில்அமைச்சர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அதிமுக சார்பில் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியான பாபுமுருகவேல் தேர்தல் ஆணையத்தில் புகார் தந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x