

சட்டப்பேரவை தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை கடந்த 10 மாத ஆட்சியில் திமுக நிறைவேற்றவில்லை என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி குற்றம்சாட்டினார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி சேலம் குரங்குச்சாவடி பகுதியில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வாக்கு சேகரித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மேட்டூர் உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பனமரத்துப்பட்டி ஏரிக்கு மேட்டூர் உபரி நீரை கொண்டுவர வேண்டும். இதற்காக, கடந்த 10 ஆண்டுகளாக போராடி வருகிறோம். காவிரியில் இருந்து வீணாக கடலில் கலக்கும் நீரில் 5 டிஎம்சி நீர் கிடைத்தால் போதும், பனமரத்துப்பட்டி ஏரி உட்பட மாவட்டத்தில் உள்ள ஏரிகளை நிரப்ப முடியும். ஆனால், இத்திட்டம் இன்னும் வரவில்லை. பனமரத்துப்பட்டி ஏரியை தூர்வார வேண்டும். இத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பாமக பெறும். சட்டப்பேரவை தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை கடந்த 10 மாத ஆட்சியில் திமுக நிறைவேற்றவில்லை. இதுபோல, அதிமுக-வும் கடந்த 10 ஆண்டுகாலமாக ஏதும் செய்யவில்லை. எனவே, தமிழகத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாக்கு சேகரிப்பின்போது, எம்எல்ஏ அருள், மாநகர அமைப்பு செயலாளர் கதிர் ராசரத்தினம், வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.