Published : 17 Feb 2022 08:50 AM
Last Updated : 17 Feb 2022 08:50 AM
சென்னை: தமிழகத்தின் முகமாக பார்க்கப்படும் சென்னை மாநகராட்சியை கைப்பற்றும் முனைப்பில் திமுக,அதிமுக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மாநகரின் சுகாதாரம், சட்டம் ஒழுங்கு, பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள், போக்குவரத்து ஆகியவற்றின் அடிப்படையிலேயே பிற மாநிலத்தவரும், வெளிநாட்டினரும் ஒட்டுமொத்த தமிழகத்தையும் மதிப்பிடுகின்றனர். அதனாலேயே சென்னை மாநகராட்சி தமிழகத்தின் முகமாக பார்க்கப்படுகிறது.
பணக்கார மாநகராட்சி
தமிழகத்திலேயே ஆண்டுதோறும் ரூ.700 கோடி சொத்து வரி வசூல், ரூ.2,500 கோடிக்கு மேல் நிதிநிலை அறிக்கை தாக்கல்என பணக்கார மாநகராட்சியாகவும் சென்னை மாநகராட்சி விளங்குகிறது. இதன் காரணமாகவே சென்னை மாநகராட்சியை கைப்பற்றுவதில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தனி கவனம் செலுத்துகின்றன.
சென்னை மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 200 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட 3,546 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 243 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு 3,303 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 633 வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. தற்போது தேர்தல் களத்தில் 2,670 வேட்பாளர்கள் உள்ளனர்.
அதிமுக 200 வார்டுகளிலும், நாம் தமிழர் கட்சி 199, பாஜக198, பாமக 194, அமமுக 189, மக்கள் நீதி மய்யம் 176, திமுக 167 மற்றும் சுயேச்சைகள் 954 பேர் போட்டியிடுகின்றனர். திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 16 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் 6 இடங்களிலும் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 3 இடங்களிலும், மதிமுக 2 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
சென்னை மாநகராட்சியில் 22 சட்டப்பேரவை தொகுதிகள், 3 மக்களவை தொகுதிகள் உள்ளன. அனைத்திலும் திமுகவினரே உறுப்பினர்களாக உள்ளனர். அதனால் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட வார்டுகளில், அந்தந்த எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தலைமை தாங்கி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை மாவட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டார். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் தங்கள் கட்சி மாவட்டத்துக்கு உட்பட்ட வார்டுகளில் சிறப்பு கவனம் செலுத்தி, தலைமையேற்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதிமுக சார்பில் அந்தந்த மாவட்ட செயலர்கள் தலைமையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலா 1 நாள் சென்னையில் பிரச்சாரம் செய்தனர். மற்ற நாட்களில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள், மாவட்ட செயலர்கள் தலைமையேற்று வாக்கு சேகரித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் சென்று அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
பாஜக சார்பில், அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவ்வப்போது கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை பிரச்சாரம் செய்து வந்தார். இடையிடையே மத்திய இணையமைச்சர் எல்.முருகன், நடிகை குஷ்பு உள்ளிட்டோரும் பிரச்சாரம் செய்தனர்.
மேயர் பதவி யாருக்கு?
சென்னையில் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சென்னை மாநகராட்சி மேயர் பதவி எஸ்சி மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 28, 31, 46, 47, 52, 53, 59, 70, 74, 77, 85, 111, 120, 135, 159, 196 ஆகிய 16 வார்டுகள் எஸ்சி மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதிக வார்டுகளில் வெற்றி பெறும் கட்சி, இந்த வார்டுகளில் வெற்றிபெறுவோரில் யாரேனும் ஒருவரையே மேயராக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
திமுக சார்பில் மேற்கூறிய 16 வார்டுகளில் 4 வார்டுகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. மீதம் உள்ள 12 வார்டுகளில் வெற்றி பெறுவோரை மேயராக்கலாம் என திட்டமிட்டிருப்பதாக கட்சி நிர்வாகிகள் சிலர் கூறுகின்றனர்.
திமுகவில் செல்வாக்கு பெற்றவராக இருப்பவர் புழல் நாராயணன். இவர் ஏற்கெனவே ஊராட்சிமன்ற தலைவராக இருந்துள்ளார். பட்டியலினத்தை சேர்ந்த இவர், தனது மனைவி கவிதாவை எஸ்சிபொது வார்டான 17-வது வார்டில் திமுக சார்பில் நிறுத்தியுள்ளார். திமுக அதிக இடங்களை பிடித்தால் கவிதாவை மேயராக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கட்சியின் மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர். ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் உள்ள 7வார்டுகளில் 6 வார்டுகள் மகளிருக்கும், அதில் 70-வது வார்டுஎஸ்சி மகளிருக்கும் ஒதுக்கப்பட்டுஉள்ளது. அதில் ஸ்ரீதனி நிறுத்தப்பட்டுள்ளார். இவர் வெற்றிபெற்றால் மேயராவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் கட்சியினர் கூறியுள்ளனர்.
இதேபோல் 100-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வசந்தி பரமசிவம் ஏற்கெனவே மாநகராட்சி கவுன்சிலராக இருந்தவர். இப்போது மகளிர் பொது வார்டில் போட்டியிடுகிறார். இவரும் மேயராவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
இக்கட்சியில் துணை மேயர் பதவி 110-வது வார்டில் போட்டியிடும் நே.சிற்றரசு, 169-வது வார்டில் போட்டியிடும் மு.மகேஷ்குமார், 137-வது வார்டில் போட்டியிடும் க.தனசேகர், 177-வது வார்டில் போட்டியிடும் பி.மணிமாறன் ஆகியோரில் யாரேனும் ஒருவருக்கு வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுக அதிக இடங்களில் வெற்றிபெற்றால், அதன் கூட்டணியில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், சமூகசமத்துவப்படையின் தலைவியுமான ப.சிவகாமியை மேயராக்க கட்சி தலைமை முடிவு செய்துஉள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 47-வது வார்டு வேட்பாளர் எஸ்.ஆர்.அஞ்சுலட்சுமி, 62-வது வார்டு வேட்பாளர் பி.வி.ஜெயகுமாரி, 46-வது வார்டு வேட்பாளர் ஜி.கிருஷ்ணவேணி, 196-வது வார்டு வேட்பாளர் கே.அஷ்வினி ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கட்சியினர் எந்த கணக்கு போட்டாலும், சென்னை மாநகராட்சியை எந்த கட்சி பிடிக்கப்போகிறது, யார் மேயராகப்போகிறார் என்பதை வாக்காளர்களே 19-ம் தேதி முடிவு செய்ய உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT