Published : 17 Feb 2022 08:44 AM
Last Updated : 17 Feb 2022 08:44 AM
சென்னை: தமிழகத்தில் இரண்டு ஆண்டுகால கரோனா இடைவெளிக்குப் பிறகு மழலையர் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. எல்கேஜி, யுகேஜி குழந்தைகள் பெற்றோருடன் உற்சாகமாக பள்ளிகளுக்கு வந்தனர்.
கரோனா தொற்று பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் பிறகு கல்லூரி மாணவர்களுக்கு இணையவழியில் வகுப்புகள் நடைபெற்றன.
பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதால் கடந்தஆண்டு நவம்பர் மாதம் பள்ளி,கல்லூரிகள் மற்றும் பல்கலைக்க்கழகங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.
இருப்பினும் பள்ளிகளில் அனைத்து வகுப்பு மாணவர்களும் அனுமதிக்கப்படவில்லை. 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வந்தன. கரோனா பாதிப்பு நன்கு குறையத் தொடங்கிய நிலையில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பிப்ரவரி 1-ம் தேதி 1 முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கின.
ஆனாலும், கரோனா அபாயத்தைக் கருத்தில்கொண்டு மழலையர் பள்ளிகள், விளையாட்டுப் பள்ளிகள், குழந்தைகள் பாதுகாப்பு மையங்களை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மழலையர் பள்ளிகள், விளையாட்டுப் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.
தமிழகத்தில் ஏறத்தாழ 18 ஆயிரம் மழலையர் பள்ளிகள், விளையாட்டுப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. மேலும், அரசுநடுநிலைப் பள்ளிகள் வளாகங்களில் அமைந்துள்ள 2,300-க்கும்மேற்பட்ட அங்கன்வாடி மையங்களிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழக அரசின் அனுமதியைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மழலையர் பள்ளிகள், விளையாட்டுப் பள்ளிகள், அங்கன்வாடி நர்சரிப் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.
மழலையர் பள்ளிகளுக்கு எல்கேஜி, யுகேஜி குழந்தைகள், தங்களது பெற்றோருடன் உற்சாகமாக வந்தனர். விளையாட்டுப் பள்ளிகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மையங்களிலும் குழந்தைகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது.
நர்சரி மற்றும் அங்கன்வாடி பள்ளிகளில் முதல்நாள் என்பதால், குழந்தைகளுக்கு அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடந்தன. வகுப்புகள் முடியும்வரை பலபெற்றோர் பள்ளி வளாகத்திலேயே காத்திருந்து, மதியம் குழந்தைகளை அழைத்துச் சென்றனர்.
அரசு அறிவுறுத்தல்
மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசியைசெலுத்திக்கொள்ள வேண்டும். மேலும், அனைத்து கடைகளின் நுழைவு வாயிலில் வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் வைக்கப்பட வேண்டும்.
அத்துடன் உடல் வெப்ப நிலைபரிசோதனைக் கருவி கொண்டுபரிசோதனை செய்ய வேண்டும். கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்யவேண்டும். தமிழகத்தில் தொடர்ந்துதொற்றுப் பரவலைக் கட்டுக்குள்வைத்திடவும், குறைத்திடவும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பிப்.16-ம்தேதி முதல் மார்ச் 2-ம் தேதி வரைநடைமுறைப்படுத்தப்படும் என அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT