

ஒரு காலத்தில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல எந்தவித கட்டணமும் செலுத்தாமல் சாலைகளைப் பயன்படுத்தி வந்தோம். ஆனால் இன்று பொது மற்றும் தனியார் துறை கூட்டு முயற்சியில் சாலைகள் பராமரிக்கப்படுவதாகக் கூறி ஆங்காங்கே சுங்கசாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணங்கள் அடிக்கடி உயர்த்தப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அதே நேரத்தில் இந்த கட்டணத்தை வைத்து சாலைகளின் பராமரிப்பு பணிகளும் நடைபெறுவதில்லை.
தமிழகத்தில் தான் அதிகம்
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 234 சங்கச் சாவடி மையங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில்தான் அதிக அளவில் 40 சுங்கச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் ஒவ்வொன்றிலும் மாறுபட்ட கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
நெடுஞ்சாலைகள் போடப்பட்டு 10 முதல் 15 ஆண்டுகள் வரையில் கட்டணம் வசூலித்துக் கொள்ள லாம் என்று ஒப்பந்தத்தில் கூறப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட ஆண்டுகள் முடிந்த பிறகும் இதுவரையில் எங்த சுங்கச் சாவடியும் மூடப்படவில்லை.
சுங்கச்சாவடிகளில் முதலில் 40 கி.மீட்டர் தூரத்திற்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ஆனால், இப்போது அது ரூ.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சில சுங்கச்சாவடிகளில் ரூ.150 வரை வசூலிக்கப்படுகிறது.
இது தொடர்பாக ஓட்டுநர்கள் பாஸ்கரன் மற்றும் ராஜசேகரன் ஆகியோர் கூறுகையில், ‘‘நாங்கள் கடந்த 25 ஆண்டுகளாக நெடுஞ்சாலைகளில் வாகனங்களை ஓட்டிக் கொண்டு இருக்கிறோம். 3 மாதங்களுக்கு ஒரு முறை திடீரென கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆனால், அந்த கட்டணத்தை வைத்து சாலைகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில்லை. இதனால், விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன.
இதுதவிர, ஆங்காங்கே இருக்கும் சாதாரண பழுதுகளையும் சரி செய்வதில்லை. நெடுஞ்சாலைகளில் சாதாரண பழுதுகள் மூலம்தான் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
இதேபோல், மழைக்காலங்களில் சாலைகளில் பல இடங்களில் நீர் தேங்கி நிற்கிறது. இதனால் பிரேக் பிடிக்கும் இடத்தில் வாகனங்கள் நிற்பதில்லை. சாலை போடப்பட்ட நாள் முதல் இதுவரை கட்டணம் மட்டும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதெற்கெல்லாம் எப்போது முடிவு வரும் என்றே தெரியவில்லை” என்றனர்.
மரங்களை நடுவதில்லை
இது தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.சடகோபன் கூறுகையில், ‘‘நிர்ணயிக்கப்பட்ட சுங்கச்சாவடி கட்டணம் எதுவரையில் வசூலிக்கப்படும் என்பதை சுங்கச்சாவடிகளில் தெரியப்படுத்த வேண்டும்.
மேலும், கட்டணத்தை மாற்றிய மைக்க ஒழுங்குமுறை ஆணையம் அமைத்து வாகன ஓட்டிகளின் கருத்துகளைக் கேட்டு கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.
சாலைகளில் கிடக்கும் இரும்புத் துண்டுகள், மணல்களை அப்புறப் படுத்த நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு மரத்தை வெட்டினால், 3 மரங்களை நட வேண்டும்.
ஆனால் ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டும் நெடுஞ்சாலைத் துறை அந்த எண்ணிக்கைக்கு ஏற்றவாறு மரங்களை நடுவதில்லை’’ என்றார்.