

ராமநாதபுரம் நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றுவதில் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது.
ராமநாதபுரம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் திமுக கூட்டணியில் திமுக 26 வார்டுகளிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும், மனிதநேய மக்கள் கட்சி 2 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 இடத்திலும் போட்டியிடுகின்றன. அதிமுக கூட்டணியில் அதிமுக 30 இடங்களிலும், தமாகா ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றன. இரண்டு வார்டுகளில் ஒன்றில் 7-வது வார்டு அதிமுக வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டது, 29-வது வார்டில் அதிமுக வேட்பாளர் மனுவை திரும்ப பெற்றார்.
தீவிர பிரச்சாரம்
இந்நிலையில் நகராட்சி தலைவர் பதவிக்கு திமுகவில் 30-வது வார்டில் போட்டியிடும் ராமநாதபுரம் வடக்கு திமுக நகர் செயலாளர் கார்மேகம் மற்றும் அதிமுகவில் அதே வார்டில் போட்டியிடும் அதிமுக மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பால் பாண்டியன் ஆகியோர் நகராட்சி தலைவர் பதவிக்கு முன்னிறுத்தப் பட்டுள்ளதாக கட்சியினர் கூறுகின்றனர். இவர்கள் இருவருமே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் யார் தோற்றாலும் தலைவர் பதவி கனவு தகர்ந்துபோகும்.
மேலும் ராமநாதபுரம் தெற்கு நகர் திமுக செயலாளர் பிரவீன் தங்கம், 7-வது வார்டில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரும் நகராட்சி தலைவருக்கு முன்நிறுத்தப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.
அதேசமயம் திமுக கூட்டணியில் ராமநாதபுரம் நகராட்சி தலைவர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
காங்கிரஸில் தலைவர் பதவிக்கு 5-வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் மாவட்ட நிர்வாகியும், தொழிலதிபருமான கோபால் என்ற ராஜாராம் பாண்டியன் முன்னிறுத்தப் பட்டுள்ளார். ராமநாதபுரம் நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.