

திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இருவரும் தங்களது வேட்புமனு தாக்கலுக் காக ஒரே விற்பனையாளரி டம்தான் முத்திரைத்தாள் வாங்கியுள்ளனர்.
தமிழக அரசியலில் கருணா நிதியும், ஜெயலலிதாவும் எதிரெதிர் துருவங்களாக இருந்து வருகின்றனர். சட்டப் பேரவைத் தேர்தலில் கருணா நிதி, திருவாரூர் தொகுதியிலும் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியிலும் போட்டியிடு கின்றனர். இருவரும் நேற்று முன்தினம் ஒரே நாளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
அதுமட்டுமின்றி, வேட்பு மனுவுக்கான முத்திரைத்தாள் களை இருவரும் ஒரே நபரிடம் வாங்கியதும் இப்போது தெரியவந்துள்ளது. சென்னை மயிலாப்பூர் பரிபூரண விநாயகர் கோயில் தெருவில் வசிப்பவர் ரவுஃப் பாஷா. 68 வயதாகும் இவர், 1997-ம் ஆண்டு முதல் முத்திரைத்தாள் விற்பனை செய்து வருகிறார். அவரிடம் தான் கருணாநிதியும், ஜெய லலிதாவும் தங்களின் வேட்பு மனுவுக்கான முத்திரைத் தாள்களை வாங்கியுள்ளனர்.
ஜெயலலிதா, கருணாநிதி மட்டுமின்றி நடிகர் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் போன்ற பிரபலங்கள், ரெட் ஜெயன்ட் மூவீஸ் உள்ளிட்ட சினிமா தயாரிப்பு நிறுவனங் களுக்கு முத்திரைத்தாள் விற்கும் ரவுஃப் பாஷா எளிமை யான வீட்டில்தான் வசிக்கிறார்.
இது தொடர்பாக ரவுஃப் பாஷா கூறும்போது, ‘‘என்னிடம் நிறைய பேர் முத்திரைத்தாள் வாங்குகின்றனர். பல நேரங் களில் பிரபல அரசியல் கட்சி களின் தலைவர்களுக்காக முத்திரைத்தாள் வாங்குகிறார் கள் என்பது எனக்குத் தெரியாது. முத்திரைத்தாள் வாங்க வரும் நபர்கள், யார் பெயரில் வேண்டும் என்று கூறும்போதுதான் தெரிய வரும். முத்திரைத்தாள்களுக்கு குறைவான கமிஷனே பெறு கிறேன். இதை சேவையாகத் தான் செய்கிறேன். என்னிடம் முத் திரைத் தாள் வாங்கி அதன்மூலம் பிரச்சினை இல்லாமல் வீடு, மனை, நிலம் வாங்கியதாக வாடிக்கையாளர்கள் கூறும் போது மகிழ்ச்சியாக இருக்கும்’’ என்றார்.