Published : 17 Feb 2022 07:00 AM
Last Updated : 17 Feb 2022 07:00 AM
கோவில்பட்டி நகராட்சி சந்தித்த முதல் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த பி.பெரியசாமி வெற்றி பெற்றார். அவர் 25.10.1969 முதல் 24.10.1974 வரை நகராட்சி தலைவராக பதவி வகித்தார். தொடர்ந்து 25.10.1986 முதல் 24.10.1991 வரை திமுகவைச் சேர்ந்த ஆர். தம்பி பாலசுப்பிரமணியன் நகராட்சி தலைவராக இருந்தார். பின்னர் 25.10.1996 முதல் 24.10.2001 வரை திமுகவைச் சேர்ந்த பி.பெரியநாயகம் தமிழரசன் நகராட்சி தலைவராக பதவியில் இருந்தார். 25.10.2001 முதல் 24.10.2006 வரை அதிமுகவைச் சேர்ந்த ஏ.விமலா ராணி தலைவராக பதவி வகித்தார். 25.10.2006 முதல் 24.10.2011 வரை திமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆர்.மல்லிகா நகராட்சி தலைவராக இருந்தார். 25.10.2011 முதல் 24.10.2016 வரை அதிமுகவைச் சேர்ந்த ஜான்சிராணி தலைவராக பணியாற்றினார்.
தற்போது நடைபெற உள்ள36 வார்டுகளுக்கான தேர்தலில்மொத்தம் 227 பேர் போட்டியிடுகின்றனர். திமுக கூட்டணியில் திமுக 21 இடங்கள், மதிமுக 6, மார்க்சிஸ்ட் 5, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை தலா 2 இடங்களில் போட்டியிடுகின்றன. அதிமுக 36, மக்கள் நீதி மய்யம் 11, நாம் தமிழர் 14, பாஜக 22, பாமக 2, அமமுக 33, பகுஜன் சமாஜ் 2, தேமுதிக 4, சமத்துவ மக்கள் கட்சி 2, தமிழ் பேரரசு கட்சி 3, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1, புதிய தமிழகம் 2 மற்றும் அனைத்து வார்டுகளிலும் சேர்த்து 59 சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர்.
பிரச்சாரம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வெற்றிபெறும் வார்டு உறுப்பினர்கள் மார்ச் 3-ம் தேதி பதவியேற்கின்றனர். மறுநாள் நகராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. எந்த கட்சி பெரும்பான்மை பெறுகிறதோ, அந்த கட்சி நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றும். பெரும்பான்மை இல்லாத சூழல் ஏற்பட்டால் ஒவ்வொரு பிரதான கட்சியும் நகராட்சி தலைவர் பதவியை பிடிக்க வெற்றிபெற்ற பிற கட்சி உறுப்பினர்கள், சுயேச்சைகளின் ஆதரவை பெற முயலும்.
கடந்த 2006-ம் ஆண்டு நடந்த மறைமுக தேர்தலில் கோவில்பட்டி நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மல்லிகா, அதிமுக கூட்டணியில் மதிமுகவைச் சேர்ந்த பவுன் மாரியப்பன் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தலில் இருவரும் சரி சமமான வாக்குகள் பெற்றனர். இதையடுத்து குலுக்கல் முறை கடைபிடிக்கப்பட்டு, மல்லிகா தலைவராக தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை கடும் போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக கட்சிகள் நகராட்சி தலைவர் பதவியை பிடிக்க திவிரமாக களமிறங்கியுள்ளன. யாருக்கு நகராட்சி என்பது தேர்தல் முடிவில் தெரியவரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT