

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக் குவதுபோன்று சட்டப்பேரவையை யாரும் முடக்க முடியாது என மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, அரிமளம், கீரமங் கலம் மற்றும் ஆலங்குடி ஆகிய பேரூராட்சிகளில் போட்டியிடும் திமுக கூட்டணிக் கட்சி வேட்பா ளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிரச்சாரம் செய்தார். அதன் ஒரு பகுதியாக கீரமங்கலத்தில் பிரச்சா ரத்தில் ஈடுபட்டபோது செய்தி யாளர்களிடம் அவர் கூறியது:
காங்கிரஸ் கட்சியின் ஜெராக்ஸ் தான் ஆம்ஆத்மி என்று பிரமதர் மோடி கூறி இருப்பது வேடிக்கை யாக உள்ளது. பஞ்சாப்பில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே பாஜகவுக்கு அம்மாநில மக்கள் பிரியாவிடை கொடுத்துவிட்டார்கள்.
பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி. அவர் முதலில் அரசியல் சாசன சட்டத்தை படிக்க வேண்டும். ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்குவதுபோல சட்டப்பேரவையை யாராலும் முடக்க முடியாது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதெல்லாம் அபத்த மான வார்த்தை. தமிழகத்தில் 2026-ல் தான் அடுத்த சட்டப் பேரவை தேர்தல் நடைபெறும். அதற்கிடையே தேர்தல் நடக்க வாய்ப்பு இல்லை என்றார்.
முன்னதாக, கீரமங்கலத்தில் பிரச்சாரத்தின்போது அவர் பேசியதாவது: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி 100 சதவீதம் வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என அதிமுகவினர் பேசுவதைக் கேட்டு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.
சினிமா போல அரசு செயல்பட முடியாது. 5 ஆண்டுகளுக்குள் நிதியை திரட்டி படிப்படியாகத்தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். பாஜகவை தமிழகத்தில் கால் ஊன்றவும், விதைக்கவும் இடமளிக்க விடக்கூடாது என்றார்.