

பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் டி.பி.எம். மைதீன்கானுக்கு கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அவரால் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட முடியவில்லை என்று அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
திமுக சார்பில் பாளையங்கோட்டை தொகுதிக்கான வேட்பாளராக மைதீன்கான் கடந்த 13-ம் தேதி அறிவிக்கப்பட்டார். அதிலிருந்து அவருக்கு எதிராக உருவ பொம்மை எரிப்பு, செல்பேசி டவரில் ஏறி தற்கொலை மிரட்டல், மொட்டை அடித்தல் என்று பல்வேறு போராட்டங்களில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 15-ம் தேதி சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்தையும் திமுகவினர் முற்றுகையிட்டனர். ஆனாலும் வேட்பாளர் மாற்றப்படவில்லை.
பிரச்சாரத்தில் சிக்கல்
எனினும் தொடர் போராட்டங்களால் தொகுதிக்குள் சுதந்திரமாகவும், கட்சியினர் ஆதரவுடனும் வாக்குச்சேகரிக்க டிபிஎம் மைதீன்கானால் முடியவில்லை. மாவட்டத்தில் திருநெல்வேலி உள்ளிட்ட மற்ற தொகுதி திமுக வேட்பாளர்கள் தேர்தல் அலுவலகங்களை திறந்து பிரச்சாரத்தை தொடங்கியிருக்கும் நிலையில், மைதீன்கான் தரப்பில் அத்தகைய நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை.
வாக்கு கேட்டு செல்லும்போது கட்சியினர் மறியல் அல்லது முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டால் என்ன செய்வது என்று மைதீன்கான் தரப்பில் கவலைப்படுவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கூட்டம் ரத்து
கடந்த சில நாட்களுக்கு முன் திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடத்தப்பட்ட அதேநாளில், பாளையங்கோட்டையிலும் அறிமுக கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கூட்டத்தில் எதிர்ப்பாளர்கள் ரகளை செய்ய வாய்ப்புள்ளது என தெரியவந்ததும், கூட்டம் ரத்து செய்யப்பட்டது. தெருக்களில் இறங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடாவிட்டாலும் ஆங்காங்கே முக்கிய அமைப்புகளை சேர்ந்தவர்கள், முக்கிய பிரமுகர்களை தனித்தனியாக சந்தித்து அவர் ஆதரவு கேட்டுவருகிறார்.
இதனிடையே, வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளான நேற்றே, அவசர அவசரமாக முக்கிய ஆவணங்களைக் கூட இணைக்காமல், அவர் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
ஸ்டாலினுக்காக காத்திருப்பு
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், பாளையங்கோட்டை தொகுதியில் விரைவில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். அப்போது அவருடன் ஒரே வேனில் நின்று வாக்கு கேட்டுவிட்டால் கட்சியினரிடையே தற்போதுள்ள அதிருப்தி விலகிவிடும் என்று டிபிஎம் மைதீன்கானின் ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.