Published : 16 Feb 2022 06:11 PM
Last Updated : 16 Feb 2022 06:11 PM

இறுதிக்கட்ட பணியில் சீமை கருவேல மரங்களை அழிக்கும் திட்டம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: சீமை கருவேலம் மரங்களை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் பொதுத்தளத்தில் இதுகுறித்து வெளியிடப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்த திட்டத்தை இரண்டு வாரங்களில் வகுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி நீதிபதி சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சீமை கருவேலம் மரங்களை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதுதொடர்பாக பொதுத்தளத்தில் வெளியிடப்படும் என்றும் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பண்ணன் தெரிவித்தார். ஏற்கெனவே ஆயிரக்கணக்கான சீமை கருவேல மரங்கள் அழிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், சீமை கருவேலம் தொழிற்சாலைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. எனவே, தொழில்துறையினர் இதற்கு எதிராக அழுத்தம் தரலாம், ஆனால் அதன் அதற்காக நாம் அடிபணியக்கூடாது என்று தெரிவித்தனர். மேலும், தான் வெளியில் இருந்து வரவில்லை தமிழகத்தைச் சேர்ந்தவன்தான் என்றும், இங்கு நடப்பவை அனைத்தும் தனக்குத் தெரியும் என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.

அதிகாரிகள், தமிழக மக்களுக்கு தயவுசெய்து சேவை செய்ய வேண்டும், சீமை கருவேல மரத்தால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து சுதந்திரமாக ஆய்வு செய்ய வேண்டும். மற்ற மாநிலங்களில் எப்படி கையாளப்படுகிறது என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறி, வழக்கு விசாரணையை மார்ச் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x