Last Updated : 16 Feb, 2022 04:40 PM

 

Published : 16 Feb 2022 04:40 PM
Last Updated : 16 Feb 2022 04:40 PM

'புதுச்சேரி கலைத் திருவிழாவில் தமிழ் புறக்கணிப்பு, இந்தி திணிப்பு...' - மாநில எதிர்க்கட்சித் தலைவர் சிவா சாடல்

புதுச்சேரி: மத்திய சிறுபான்மை அமைச்சகம் சார்பில் நடைபெறும் கைவினை பொருட்களின் கண்காட்சியில் தமிழ் மொழி, புதுச்சேரி சுயசார்பும் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக திமுக சட்டமன்ற உறுப்பினரும், புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவருமான சிவா குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் சுற்றுலா துறை, கலை பண்பாட்டு துறை மூலம் நாட்டுப்புற பாரம்பரிய கலைகளை வளர்க்கும் நோக்கிலும், அவற்றைச் செய்து வரும் கலைஞர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையிலும் இயல், இசை, நாடக கலைஞர்கள் மற்றும் கைவினை கலைஞர்களுக்காக பிரத்யேக கண்காட்சியும், கலைத் திருவிழாவும் நடத்தப்பட்டது. அதுபோல் தற்போதையை அரசு அனைத்து கலைஞர்களின் நலனுக்காக புதுச்சேரியில் எந்த ஒரு செயல்பாட்டையும் மேற்கொள்ளவில்லை. கரோனா ஊரடங்குக்கு பின் கோயில் திருவிழாக்கள், திருமணங்கள், பொது நிகழ்ச்சிகள் என எந்த நிகழ்ச்சிகளும் இல்லாமல் வாழ்வாதாரம் பாதித்து வருமானமின்றி வறுமையில் வாடும் இயல், இசை, நாடக, தெருக்கூத்து கலைஞர்களை பாதுகாக்க புதுச்சேரி அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இச்சூழலில் பல கோடிகள் செலவு செய்து மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சகம் மூலம் சுயசார்பு-பாரதம், உள்ளூர் பொருட்களை ஊக்குவிக்க 'ஹுனர் ஹாட்' எனும் பெயரில் கைவினை பொருட்களின் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. முப்பது மாநில கலைஞர்களின் கைவினை, கைத்தறி, கலைபொருட்கள் சங்கமித்துள்ள இக்கண்காட்சியில் உள்ளூர் கலை மற்றும் கைவினை கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. உள்ளூர் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து வெளி மாநில கலைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதை எப்படி ஏற்க முடியும்? இதற்கு பெயர் சுயசார்பா? பிழைக்க வழியின்றி சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகியுள்ள புதுச்சேரி கலைஞர்களை இப்படித்தான் அவமரியாதை செய்வதா?

புதுச்சேரியின் இந்திய - பிரெஞ்ச் கலாச்சார சிறப்பு, பாரம்பரியம், கலைகள் பற்றிய ஒரு அறிகுறியும் இந்நிகழ்வில் இல்லை. வடமாநிலத்தவரின் வருவாயை பெருக்க சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரி பத்ம ஸ்ரீ விருது பெற்று கலைஞர்கள், கலைமாமணி பட்டம் பெற்றவர்களுக்கு கூட முறையான அழைப்பும் மரியாதையும் தரவில்லை. அக்கண்காட்சி அரங்குகள் மற்றும் அலுவலகம் உள்ளிட்ட எங்கு பார்த்தாலும் புரியாத இந்தி மொழிதான் பேசப்படுகிறது. அக்கண்காட்சிக்கு செல்லும் மக்களால் பொருட்களைப் பற்றி விவரங்களை கேட்பதோ, விலைகள் விசாரிப்பதோ கூட முடியவில்லை. ஏதேனும் பிரச்சனை வந்து அங்குள்ள அலுவலகத்திற்கு சென்றாலும் இந்தியில்தான் விசாரிக்கின்றனர். இதனால் மக்களால் தங்கள் பாதிப்புகளைக்கூட தெரிவிக்க முடியவில்லை.

எனவே, இக்கண்காட்சி தமிழ் மொழியையும், புதுச்சேரி சுயசார்பையும் புறக்கணிப்பதாகவும், புதுச்சேரியில் இந்தியை திணிப்பதாகவுமே உள்ளது. மத்திய அரசின் திட்டங்களாக இருந்தாலும், கண்காட்சிகளாக இருந்தாலும் இந்தியில் பெயர் சூட்டி நடத்த அனுமதிப்பதை தவிர்த்து, தமிழில் பெயர் சூட்டி நடத்தினால் மட்டுமே அனுமதிக்க வேண்டும். மேலும் உள்ளூர் கலைஞர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். இல்லையெனில் மீண்டும் ஓர் மொழிப் போராட்டம் தொடங்கும் என்றும் எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்" என்று சிவா கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x