

மதுரை: மதுரை மாநகராட்சி வார்டுகளை ஏ, பி, சி என பிரித்து வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்கு பணம் வழங்க பாஜகவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி தேர்தலில் பாஜக 99 வார்டுகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, நடிகர் செந்தில், நடிகை காயத்ரி ரகுராம், கட்சியின் தேசிய துணைத் தலைவர் சுதாகர் ரெட்டி ஆகியோர் பிரச்சாரம் செய்துள்ளனர். பாஜக வேட்பாளர்களும் திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். பாஜகவில் வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுக்கு பணம் வழங்குவதற்காக மாநகராட்சி வார்டுகளை ஏ, பி, சி என 3 பிரிவுகளாக பிரித்துள்ளனர்.
"ஏ" பிரிவு வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ரூ.3 லட்சம், "பி" பிரிவு வார்டுகளில் போட்டியிடுவோருக்கு ரூ.1 லட்சம், "சி" பிரிவு வார்டில் போட்டியிடுவோருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணத்தை ஒரே தவணையாக வழங்காமல், இரு தவணையாக வேட்பாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வேட்பாளர்களின் வங்கிக் கணக்கு விபரங்கள் கட்சி மேலிடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், மதுரை மாநகராட்சியில் வெற்றி வாய்ப்புள்ள 25 வார்டுகளை தேர்வு செய்து கூடுதலாக செலவு செய்யவும் பாஜக முடிவு செய்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், பல வேட்பாளர்கள் தேர்தல் செலவுக்காக கட்சி பணத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதே நேரத்தில் வேட்பாளர்கள் நேர்காணலின்போது தேர்தல் செலவு தொடர்பாக அளித்த உறுதிமொழியின்படி தேர்தலில் செலவு செய்கிறார்களா என்பதை கட்சி நிர்வாகிகள் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.
அந்தக் கண்காணிப்பு முடிவின் அடிப்படையிலேயே பணம் விநியோகம் இருக்கும் என நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து பாஜக வேட்பாளர்கள் சிலர் கூறுகையில், ’’தேர்தலுக்கு சில நாட்களே இருப்பதால் இனிமேல் தான் பிரச்சாரம் சூடுபிடிக்கும். இவ்வளவுநாள் வார்டின் பிரதான பகுதிகளில் பிரச்சாரம் செய்து வந்தோம். வரும் நாட்களில் தெருத் தெருவாக, வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும். முகவர்கள் நியமனம் உட்பட தேர்தலுக்கான இறுதிகட்ட பணிகளுக்கு அதிக செலவாகும். இதனால் கட்சிப் பணத்தை நம்பியுள்ளோம். ஆனால் கட்சியிலிருந்து பணம் வருவது தாமதமாகி வருகிறது” என்றனர்.