கோவையில் வாக்காளர்களுக்கு ‘ஹாட் பேக்’ விநியோகம்; அமைச்சர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாநில தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

கோவையில் வாக்காளர்களுக்கு ‘ஹாட் பேக்’ விநியோகம்; அமைச்சர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாநில தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு
Updated on
1 min read

சென்னை: கோவையில் வாக்காளர்களுக்கு திமுகவினர் ஹாட்பேக் விநியோகம் செய்வதாகவும், இதற்காக அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர், காவல்ஆணையர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில, தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக செய்தித்தொடர்பாளர் பாபு முருகவேல் அளித்துள்ள மனு: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தை திமுக கைப்பற்றத் துடிக்கிறது. அதன் வெளிப்பாடாக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ரவுடிகள், கூலிப்படைகளை அமைச்சரும் மாவட்ட பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி தலைமையில் பலரும்மாவட்டத்தில் பரவியுள்ளனர். அமைதியான கோயம்புத்தூரை போராட்ட களமாக மாற்ற நினைக்கும் அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சித் தலைவர், காவல் ஆணையாளர் மீதும் நடவடிக்கை வேண்டும்.

வாக்குகளைக் கவர பல்வேறு வாகனங்களில் கரூரிலிருந்து கொண்டுவரப்பட்ட ஹாட் பாக்ஸ்களை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய முயற்சிக்கும்போது அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் தடுத்து நிறுத்தி, காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். எழுத்து மூலம் புகாரும் அளிக்கப்பட்டது. ஆனால், துணைஆணையர் புகார் அளித்தவர்கள்மீது நடவடிக்கை எடுத்துள்ளார். பிடிபட்ட பொருட்களை தேர்தல்நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்காமல் காவல்துறையினரே, முன்நின்று வாக்காளர்களுக்கு விநியோகித்துள்ளனர்.

இதைக் கண்டிக்கும் விதமாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவைமாவட்ட அனைத்து சட்டப்பேரவைஉறுப்பினர்கள் மாவட்ட தேர்தல்நடத்தும் அதிகாரி, மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பம் என்று ஒரு விண்ணப்பத்தை தமிழகம் முழுவதும் திமுகவினர் வழங்கி வருகின்றனர். இதுகுறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in