Published : 16 Feb 2022 09:26 AM
Last Updated : 16 Feb 2022 09:26 AM
அனைத்துப் பிரிவு மக்கள் மீதும் தாக்குதல் நடத்தும் வகையில் அறிவிக்கப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து வரும் 28-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகியவை அறிவித்துள்ளன.
இதுகுறித்து சிஐடியு பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் பி.சண்முகம், அகிலஇந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் நேற்று கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:
கரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின்வாழ்நிலையை மேம்படுத்துவதற்கும், பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை மீட்டெடுப்பதற்கும், உற்பத்தி சேவை மற்றும் நிதித்துறை நிறுவனங்களை வலுப்படுத்துவதற்குமான எந்தவித உருப்படியான திட்டத்தையும் மத்திய பட்ஜெட் பிரதிபலிக்கவில்லை.
விவசாயிகளுக்கு ஏமாற்றம்
விவசாயிகளின் துயரங்களுக்கு தீர்வை சொல்லாமல் மீண்டும் ஒரு முறை விவசாயிகளுக்கு பட்ஜெட் ஏமாற்றத்தை தந்துள்ளது. சுகாதாரம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடுகளும் குறைக்கப்பட்டுள்ளன.
இந்த பட்ஜெட்டில் முறைசாராத் தொழிலாளர்களுக்கென எந்த நிதி ஒதுக்கீடும் புதிதாக இல்லை.
விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் உள்ளிட்ட அனைத்துபிரிவு மக்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இத்தாக்குதலை எதிர்கொண்டுஆட்சியாளர்களின் கொள்கைகளை பின்னுக்கு தள்ளக்கூடிய வகையில் மார்ச் 28, 29-ம்தேதிகளில் நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தத்துக்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டைகண்டித்து பிப்.28-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT