

சென்னை: இந்திய ராணுவத்தின் தென் பிராந்திய சாகச சங்கம் மற்றும் இஎம்இபடகோட்டும் சங்கம் சார்பில் முதல்முறையாக பெண் ராணுவ அதிகாரிகள் பங்கேற்கும் கடல் சாகசப் பயணம் நேற்று தொடங்கியது.
சென்னை துறைமுகத்தில் நடந்த விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கொடியசைத்து, சாகசப் பயணத்தை தொடங்கி வைத்தார்.
விழாவில் பேசிய அவர், ‘‘இந்திய பெண் அதிகாரிகளின் வலிமையை வெளிப்படுத்த இந்த சாகசப் பயணம் ஒரு வாய்ப்பாக அமையும். ராணுவத்தில் இளம்பெண்கள் சேர்ந்து, தேசத்துக்கு சேவை செய்ய ஊக்கம் அளிக்கும். படகோட்டும் அரங்கில் மிகப் பெரியதாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மகத்தான தேசத்தின் பெண்கள், ஆயுதப் படைகள் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கும்’’ என்றார்.
இந்த சாகசக் குழு சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் வரை சென்றுவிட்டு மீண்டும் சென்னை திரும்பும்.
இந்த நிகழ்ச்சியில், தென்னிந்திய ராணுவ அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் ஏ.அருண், சென்னை துறைமுக நிறுவனத்தின் தலைவர் சுனில் பாலிவால், செகந்திராபாத் ராணுவ மின்னணு, மெக்கானிக்கல் கல்லூரியின் கமாண்டன்ட் லெப்டினென்ட் ஜெனரல் டிஎஸ்ஏ நாராயணன், இஎம்இ படகோட்டும் சங்கத்தின் தலைவர் மேஜர் முக்தா எஸ்.கவுதம் மற்றும் கடற்படை, கடலோர காவல்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.