

கடலூர்: நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் என்எல்சி இந்தியா நிறுவனம் கடந்த நிதி ஆண்டைவிட இரட்டிப்பாக ரூ. 797 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 9 மாத காலத்தில் தனது துணை நிறுவனத்தையும் சேர்த்து, 2,174 கோடி யூனிட் மின்சக்தி உற்பத்தி செய்து, மின் வாரியங்களுக்கு வழங்கி சாதனை படைத்துள்ளது.
1.4.2021 முதல் 31.12.2021 வரையிலான நடப்பு நிதி ஆண்டின் (2021-22) முதல் ஒன்பது மாதங்கள் மற்றும் 3-வது காலாண்டில்,என்எல்சி இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகளை அறிவிப்பதற்காக நேற்று முன்தினம் (பிப்.14) மாலை, அந்நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டம், நெய்வேலியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், என்எல்சி இந்தியா நிறுவனம் தனியாகவும், அதன் துணைநிறுவனமான என்எல்சி தமிழ்நாடுமின் நிறுவனத்துடன் இணைந்து ஒட்டுமொத்தமாகவும் மேற்கொண்ட உற்பத்தி மற்றும் நிதிநிலை செயல்பாடுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, இந்நிறுவனம், நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், 1,848 கோடியே 50 லட்சம் யூனிட் மின் உற்பத்தி செய்துள்ளது. முந்தைய நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாத காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மின் உற்பத்தி அளவை விட இது 34.51 சதவீதம் அதிகமாகும்.
என்எல்சியின் துணை நிறுவனத்தையும் சேர்த்து முதல் ஒன்பது மாதங்களில் ஒட்டுமொத்தமாக 2,174 கோடி யூனிட் மின்சக்தி உற்பத்தி செய்துள்ளது. முந்தைய நிதி ஆண்டைவிட 23.49 சதவீதம் கூடுதல் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், நாட்டின் மின் நிலையங்களின் சராசரி மின்உற்பத்தித் திறன் 57.16 சதவீதமாக இருந்த நிலையில், என்எல்சிஇந்தியா நிறுவன மின் நிலையங்கள் 70.20 சதவீதம் என்ற மிகஅதிக உற்பத்தித் திறனுடன் இயங்கி, கூடுதல் மின் சக்தியை உற்பத்தி செய்துள்ளன.
நடப்பு நிதியாண்டில் இந்நிறுவனம் தனது துணை நிறுவனத்துடன் இணைந்து ரூ.9,381 கோடிக்கு வர்த்தகம் மேற்கொண்டுள்ளது. கடந்த நிதியாண்டை விட இது 14 .43 சதவீதம் அதிகம். நிகர லாபத்தைப் பொறுத்தவரையில் துணை நிறுவனங்களுடன் இணைந்து ரூ.784கோடியை ஈட்டியுள்ளது. முந்தையஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ஈட்டிய ரூ. 589 கோடியை விட, இது 33.28 சதவீதம் அதிகம்.
என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தனிப்பட்ட வர்த்தக அளவில், முந்தைய நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் ஈட்டிய தொகையான ரூ.6,111 கோடியைவிட 29.06 சதவீதம் அதிகமாக, நடப்பு நிதி ஆண்டில் ரூ.7,887 கோடிக்கு வர்த்தகம் மேற்கொண்டுள்ளது. நிகர லாபமும், முந்தைய ஆண்டில், ஈட்டிய தொகையான ரூ387 கோடியை விட 105.96 சதவீதம் அதிகமாக ரூ.797 கோடி ஈட்டப்பட்டு உள்ளது.
மேலும், மின் வாரியங்களுக்கு மின்சக்தி வழங்கியது தொடர்பான நிலுவைத் தொகையின் பெரும்பங்கு நடப்பு நிதியாண்டில் வசூலிக்கப்பட்டு உள்ளது. 31.12.2020-ல் நிலுவையில் இருந்த ரூ.8,554 கோடியில் 51.30% வசூலிக்கப்பட்டதன் மூலம் 31.12.2021-ல் ரூ.4,388 கோடி மட்டுமே நிலுவையில் உள்ளது.