

திருச்சியில் இன்று நடைபெறவுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் தொண்டர்கள் வெயில் கொடுமையிலிருந்து தப்பிக்க 5 லட்சம் குடிநீர் பாக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது.
திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலுள்ள 19 தொகுதி களுக்கான அதிமுக வேட்பாளர் களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் இன்று (ஏப்ரல் 23) மாலை 6 மணிக்கு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த பிரச்சாரக் கூட்டத்துக்கு ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் 5,000-க்கும் மேற்பட்ட போலீ ஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற் கான ஏற்பாடுகள் குறித்து தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி திரிபாதி நேற்று திருச்சியில் காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். முதல்வர் வந்து செல்லும் வழித்தடங்கள், பொதுக்கூட்டம் நடைபெற உள்ள மைதானம் ஆகியவற்றில் மேற்கொள்ளப் பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இது ஒருபுறமிருக்க, அண்மை யில் நடைபெற்ற முதல்வரின் பிரச்சாரக் கூட்டங்களில், வெயிலால் தொண்டர்கள் மயங்கி விழுந்து இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், திருச்சியில் அதுபோன்று நடைபெறாமல் தடுக்க அதிமுகவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண் டுள்ளனர்.
தயார் நிலையில் ஆம்புலன்ஸ்
அதிமுக மூத்த நிர்வாகிகள் கூறும்போது, “தொண்டர்கள் அமரும் பகுதியில் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் வைக்கப் படுகின்றன. தொண்டர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் தடுப்பதற்காக ஆங்காங்கே தடுப்புகளை அமைத்து, அதற்குள் குறிப்பிட்ட அளவு நபர்கள் மட்டுமே அமர வைக்கப்பட உள்ளனர். இவர்களின் தாகம் தணிப்பதற்காக 5 லட்சம் குடிநீர் பாக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது. இதுதவிர மோர், குளுக்கோஸ், ஜூஸ் பாக்கெட்டுகளும் ஆயிரக் கணக்கில் வழங்கப்பட உள்ளன. மேலும், யாருக்காவது மயக்கம், தலைசுற்றல், உடல்நிலை கோளாறு ஏற்பட்டால் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கவும், மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லவும் மைதானத்தின் வெவ் வேறு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட உள்ளன என்றனர்.
போக்குவரத்தில் குளறுபடி
முதல்வரின் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறும் ஜி கார்னர் மைதானம் மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் ஒருபகுதியில் அமைந்துள்ளது. இங்கு தொண்டர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால், மதியம் 12 மணிக்கு மேல் இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. அதேபோல மாலையில் விமானநிலையத்தில் இருந்து பொதுக்கூட்ட மேடைக்கு முதல்வர் காரில் வந்துசெல்ல உள்ளதால், அந்த சமயங்களில் புதுக்கோட்டை சாலையிலும் போக்குவரத்து தடை செய்யப்பட உள்ளது. இதனால் வெளியூரிலிருந்து திருச்சி வரும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வாகனங்களை வேறு வழித்தடங்களில் இயக்குவதற்கான போக்குவரத்து மாற்றம் குறித்து காவல் துறை நேற்று மாலை வரை எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் என்ன செய்வதென தெரியாமல் வாகன ஓட்டிகள் குழப்பத்தில் உள்ளனர்.