

கிருஷ்ணகிரி நகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணியைச் சேர்ந்த 33 வேட்பாளர்களை ஆதரித்து திமுக கொள்கைபரப்பு செயலாளரும், தமிழக பாடநூல் நிறுவன தலைவருமான லியோனி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். கிருஷ்ணகிரி பழையபேட்டை, ராசுவீதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து வகை மாம்பழங்களும் கிடைக்கிறது. ஆனால் கூறும்போது சேலம் மாம்பழம் என்கின்றனர். இதேபோல் தான் மெட்ரோ ரயில், ஒகேனக்கல் குடிநீர் உள்ளிட்ட திட்டங்களையும் திமுக கொண்டு வந்தது. ஆனால் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி அதற்கு உரிமை கொண்டாடுகிறார்.
பிரதமர் மோடி, தமிழகத்தின் இட்லி, சாம்பார் பிடிக்கும் என்கிறார், ஆனால் தமிழக மாணவர்கள் எதிர்க்கும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க மறுக்கிறார். திமுக எத்தனையோ சாதனைகளை செய்து வருகிறது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், பெண்களுக்காகவும், சமூகநீதிக்காகவும் போராடும் ஒரே கட்சி திமுக தான்.
எனவே கிருஷ்ணகிரி நகராட்சியில் திமுக கூட்டணியை ஆதரித்து அனைத்து வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன், நகர செயலாளர் நவாப், நிர்வாகிகள் ராஜேந்திரன், அஸ்லாம், டேம் வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.