Published : 16 Feb 2022 08:06 AM
Last Updated : 16 Feb 2022 08:06 AM

பாமக வெற்றி பெற்றால் மதுக்கடைகள் மூடப்படும்: காஞ்சியில் அன்புமணி ராமதாஸ் வாக்குறுதி

காஞ்சிபுரம் வணிகர் வீதியில் நடைபெற்ற கூட்டத்தில் பாமக வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் பாமக வெற்றி பெற்றால் மதுக்கடைகளை மூடுவது தொடர்பாக முதல் கையெழுத்துப் போடப்படும் என்று பாமகவின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாநகராட்சியில் போட்டியிடும் 41 வேட்பாளர்களையும், உத்திரமேரூர், வாலாஜாபாத் பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களையும் ஆதரித்து அன்புமணி பேசியதாவது:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காஞ்சி மாநகராட்சியில் மேயர் பதவியை பாமக பிடித்தால் முதல் கையெழுத்து டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்குப் போடப்படும்.

அண்ணா பிறந்த மண்ணான காஞ்சிபுரம் பட்டுக்குப் பெயர் பெற்ற நகரம். ஆனால், இந்த நகரம் வளர்ச்சி அடையவில்லை. எங்குப் பார்த்தாலும் கடுமையான போக்குவரத்து நெரிசல். சாக்கடை தேங்கியுள்ளது. அண்ணா பிறந்த மண்ணை திமுக, அதிமுக மறந்துவிட்டன. இந்த நகரத்தை மற்ற நகரங்களுக்கு எடுத்துக்காட்டான நகரமாக பாமக மாற்றும்.

தமிழகத்தில் 55 ஆண்டுகள் திமுக, அதிமுக ஆட்சி செய்துள்ளன. கர்நாடகத்தில் தொடங்கும் பாலாறு தமிழகத்தில் 222 கி.மீ. தூரம் ஓடுகிறது. பாலாற்றில் ஒவ்வொரு 5 கி.மீ. தொலைவுக்கும் ஒரு தடுப்பணை கட்டியிருக்க வேண்டும். அவ்வாறு கட்டாததால் தண்ணீர் வீணாககடலில் கலக்கிறது. பாலாற்றில் போதிய தடுப்பணைகளைக் கட்டியிருந்தால் குடிநீருக்கும், விவசாயத்துக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

நீட் தேர்வுக்கு யார் காரணம் என்று திமுகவும், அதிமுகவும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வருகின்றன. நீட் தேர்வுக்கு முதல் காரணம் காங்கிரஸ், 2-வது காரணம் திமுக, 3-வது காரணம் பாஜக, 4-வது காரணம் அதிமுக. இது தொடர்பான விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலினும், முன்னாள் முதல்வர் பழனிசாமியும் ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர். இடத்தை சொல்லுங்கள் விவாதம் செய்ய நானும் வருகிறேன்.

நீட் பற்றி விவாதிக்கத் தயாராகும் திமுக, அதிமுகவுக்கு நான் ஒரு சவால் விடுகிறேன். அதற்கான மேடையை நானே அமைத்துத் தருகிறேன். மது விலக்கு பற்றியும் விவாதிக்கத் தயாரா? இந்தியாவில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் அதிக உயிரிழப்பு ஏற்படுவது தமிழகத்தில்தான்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்புதூர் பகுதி தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. ஆனால், வேலையைத் தமிழக மக்களுக்குக் கொடுக்காமல் வெளி மாநில இளைஞர்களுக்குக் கொடுக்கின்றனர் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பாமக மாவட்டச் செயலர் மகேஷ்குமார், முன்னாள் மாவட்டச் செயலர் உமாபதி உட்படப் பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x