Published : 16 Feb 2022 08:12 AM
Last Updated : 16 Feb 2022 08:12 AM

குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்க பட்ஜெட்டில் அறிவிப்பு: திருக்கழுக்குன்றம் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உறுதி

திருக்கழுக்குன்றத்தில் நடைபெற்ற திமுக கூட்டணி வேட்பாளர் அறிமுகக் கூட்டம்.

திருக்கழுக்குன்றம்: குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நிச்சயம் அறிவிப்பு வெளியிடப்படும் என்று பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு கூறினார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம், திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களாகச் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் பெரும்புதூர் எம்பி டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் அமைச்சர் அன்பரசன் பேசியதாவது: திமுக தேர்தல்வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என முன்னாள் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விரைவில் இன்னும் பல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க உள்ளார். அதனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலோடு அதிமுகவின் கதையை வாக்காளர்கள் முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், எம்பி டி.ஆர்.பாலு பேசியதாவது: சட்டப்பேரவை தேர்தலில் வழங்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றதேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைப் பெண்கள் நினைத்து பார்க்க வேண்டும். குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நிச்சயம் அறிவிப்பு வெளியிடப்படும். கரோனா தொற்று நிவாரணத் தொகையாக அறிவிக்கப்பட்ட ரூ.4 ஆயிரத்தை வழங்கியவர் முதல்வர். இதேபோல் பலவாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மக்கள் நன்றிதெரிவிக்கும் வகையில் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் எம்பி செல்வம், ஒன்றிய செயலாளர் தமிழ்மணி, நகரச் செயலாளர் யுவராஜ் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். மாமல்லபுரம், திருப்போரூர் நகரங்களிலும் பிரச்சாரம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x