

சென்னை: கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழையால் நெல், உளுந்து, பயிறு, பருத்தி ஆகிய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த பிப்ரவரியில் சில தினங்களுக்கு முன் பருவம் தவறிபெய்த கனமழையால் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில்அறுவடைக்குத் தயாராக இருந்தநெற்பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் உளுந்து, பயிறுமற்றும் பருத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடை செய்து கொள்முதல் மையங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நெல்மூட்டைகள் மழையில் நனைந்து, முளைத்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தபாதிப்புகளிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பாகும்.
ஆனால் மத்திய பாஜக அரசு, தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. நவம்பரில் பெய்த அபரிமிதமான மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்திய அரசிடம் தமிழக அரசு ரூ.6,230.45கோடி நிவாரண நிதி கோரியிருந்தது. ஆனால் பலமுறை தமிழக முதல்வர் மத்திய அரசிடம் வலியுறுத்தியும் இதுவரை ஒரு ரூபாய் கூட நிவாரண உதவி வழங்காதது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதை மத்திய அரசு கைவிட்டு, தமிழக அரசு கோரிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.
பிப்ரவரியில் பெய்த மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு பயிர்க் காப்பீட்டு தொகை கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. எனவே, நெல், உளுந்து, பயிறு, பருத்தி ஆகிய பயிர்கள் பாதிக்கப்பட்டு இழப்புகளுக்கு ஆளாகியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.