வேலூர் இப்ராஹிம் பிரச்சாரம் அனுமதி கோரிய மனு தள்ளுபடி: ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவு

வேலூர் இப்ராஹிம் பிரச்சாரம் அனுமதி கோரிய மனு தள்ளுபடி: ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவு
Updated on
1 min read

சென்னை: பிரச்சாரத்துக்கு அனுமதி கோரிய பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிமுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்.19-ம் தேதி நடக்கவுள்ளது. கோவை போத்தனூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பிரச்சாரம் மேற்கொள்ள சென்றார். அப்போது அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி போலீஸார் அவரை அங்கிருந்து புறப்படுமாறு தெரிவித்தனர். ஆனால், அவர்மறுக்கவே, பாதுகாப்பு காரணங்களுக்காக போலீஸார் அவரை கைது செய்தனர்.

தன்னை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கக் கோரி வேலூர் இப்ராஹிம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ‘‘அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பதற்றமான பகுதிகளுக்கு செல்லக் கூடாது என ஏற்கெனவே பலமுறை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன்காரணமாக அவரை போலீஸார் 3 முறை தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர். பல்வேறு உண்மைத் தகவல்களை மறைத்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்’’ என்றார். அதைபதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை தள்ளுபடி செய்து மனுதாரருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in