Published : 16 Feb 2022 09:02 AM
Last Updated : 16 Feb 2022 09:02 AM
சென்னை: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்படும் கட்டணங்களை கண்காணிப்பதற்கு பணியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கவேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவ இடங்களில் 50 சதவீத இடங்களுக்கு, அந்தந்தமாநில அரசுகளின் மருத்துவக்கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்துக்கு இணையாக மட்டுமே வசூலிக்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணமான ரூ.13,650-ஐ, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும். மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கு முன்பாகவே, இந்த கட்டண நிர்ணய ஆணையை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டால்தான், தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஏழை, எளிய மாணவர்கள் சேர முடியும்.
உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, நடப்பாண்டிலேயே அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகஅரசுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரிகளில் உள்ள 100 சதவீத உயர் சிறப்பு மருத்துவ இடங்களையும் தமிழக மாணவர்களுக்கே வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்படும் கட்டணங்களை கண்காணிப்பதற்கு, பணியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைக்க அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT