Published : 16 Feb 2022 07:34 AM
Last Updated : 16 Feb 2022 07:34 AM

மதுரை அதிமுகவில் ‘மும்மூர்த்திகள்’: ஓபிஎஸ் பெருமிதம்

மதுரை பழங்காநத்தத்தில் நேற்றிரவு மாநகராட்சி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப் பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது;

மதுரை அதிமுகவில் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் மும்மூர்த்திகள் போல் செயல்படுகின்றனர். இவர்கள் தலைமையில் தொண்டர்கள், நிர்வாகி கள் கட்டுக்கோப்பாக தேர்தல் பணி யாற்றி அதிமுகவுக்கு வெற்றியைத் தேடித்தர வேண்டும். ஜெயலலிதா சாதாரண தொண்டனுக்கு கூட பதவியும், அதிகாரமும் கொடுத்து அழகு பார்த்தார். அதே நிலைதான் தற்போது அதிமுகவில் தொடர்கிறது.

மதுரை மாநகராட்சியில் அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில்தான் அதிக திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. சட்டம், ஒழுங்கு நல்ல நிலையில் இருந்தது. மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைய இருந்தது. ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மை என்று நம்பிவிடுவார்கள். அந்த உத்தியை திமுக கையில் எடுத்து தேர்தல் அறிக்கை என்ற பொய்யைத் சொல்லி மக்களை ஏமாற்றிவிட்டனர்.

ஆட்சிக்கு வந்தால் ‘நீட்’ தேர்வை ரத்து செய்வதற்கு முதல் கையெழுத்து போடுவேன் என்றார். ‘நீட்’ தேர்வை ரத்து செய்வதற்கு யார் கையெழுத்து போட வேண்டும்.

தமிழக அரசு பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். குடியரசு தலைவர்தான் கையெழுத்து போட்டு நீட் தேர்வை ரத்து செய்ய ஒப்புதல் வழங்க வேண்டும். ஆனால், இவர் ஓரே கையெழுத்தில் ரத்து செய்வதாக ஏமாற்றிவிட்டு தற்போது கையெழுத்துப் போட்டு போட்டு பார்க்கிறார். அவரால் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய முடியவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார், முன்னாள் மேயர் விவி.ராஜன் செல்லப்பா, முன்னாள் எம்பி.கோபாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x