

சவுதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 62 மீனவர்கள் தாயகம் திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தின் ராமநாதபுரம், நாகப்பட்டினம், கடலூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்ற 62 மீனவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக தாய்நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
அவர்களுக்கு உணவு, ஊதியம் கொடுக்காமல், வேலைக்கும் அனுப்பாமல் சித்ரவதை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகத்தை அணுகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, மத்திய அரசு இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு தமிழகத்தைச் சேர்ந்த 62 மீனவர்களும் சொந்த ஊருக்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று இரா.முத்தரசன் கூறியுள்ளார்.