Published : 28 Apr 2016 01:00 PM
Last Updated : 28 Apr 2016 01:00 PM

தனிக்கட்சி ஆட்சி சகாப்தம் முடிவுக்கு வரும்: கடலூரில் ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு

இந்த சட்டமன்றத் தேர்தலோடு தமிழ்நாட்டில் தனிக்கட்சி ஆட்சி சகாப்தம் முடிவுக்கு வரும் என்று கடலூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

கடலூர் தொகுதியில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தென்னந்தோப்பு சின்னத்திற்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு கடலூரில் தலைமை தபால் நிலையம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியது: விஜயகாந்தை கூட்டணியில் சேர்ப்பதற்காக பாஜக, திமுக பல்வேறு யுக்திகளை கையாண்டது. எனினும், ஊழலுக்கு துணை போகமாட்டேன் என்று கூறி விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார். அதன்பின்னர் தமாகா இணைந்தது.

இந்த புதிய மக்கள் நல கூட்டணியால் தமிழகத்தில் கடந்த 68 ஆண்டு காலமாக காங்கிரஸ், திமுக, அதிமுக என்று தனிக்கட்சிகளின் ஆட்சி நடத்தி வந்தக் காலம் இந்த தேர்தலோடு முடிவுக்கு வரும். தனிக்கட்சி ஆட்சி சகாப்தம் முடிவடைந்து விஜயகாந்த் தலைமையில் 6 கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமையும். கூட்டணியில் ஒருவர் தவறு செய்தால் மற்ற 5 கட்சியின் பொறுப்பாளர்கள் தட்டிக்கேட்பார்கள் என்பதால் தவறு நடக்கும் வாய்ப்பில்லை.

சைதாப்பேட்டையில் தவறுதலாக, 'கம்யூனிஸ்டுகளுக்கு வாக்களியுங்கள்' என்றுக் கூறிய கருணாநிதி தவறியும் கூட கிரானைட் ஊழல் குறித்து பேசவில்லை. அதேப்போன்றே ஜெயலலிதாவும் கிரானைட் ஊழல் குறித்து பேசவில்லை. ஜெயலலிதா கூட்டங்களில் மக்களை ஆட்டு மந்தையில் அடைப்பதை போல் அடைத்து வைத்து மனித வதை செய்கிறார். இந்த கூட்டங்களில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் அரசியல் பேசாமல் கதாகலச்ஷேபம் செய்கிறார்கள் 47 ஆண்டுகாலம் அதிமுகவும், திமுகவும் ஆட்சியில் இருந்துள்ளனர். ஆட்சியை மக்கள் சேவை செய்யும் புனிதமான வாய்ப்பை பயன்படுத்தாமல் இருவரும் கொள்ளையடிக்கவும், சுயநலத்திற்காகவும் பயன்படுத்தி கொண்டனர்.

மதுரையில் 2001-06 வரையிலான அதிமுக ஆட்சியில் 76 குவாரிகள், 2006-11ல் திமுக ஆட்சியில் 68 குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த 2 கட்சிகளின் உதவியுடனேயே 22 ஆண்டுகளாக ரூ.1.06 லட்சம் கோடி வரையில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வருவாய் கிடைத்திருந்தால் மதுவிலக்கு அமல்படுத்தியிருக்கலாம். போக்குவரத்துத்துறை முதல் பல்கலைக்கழக துணைப் பதிவாளர் பதவி வரையில் லஞ்சம் பெறப்பட்டே பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5ல்1 பங்கு இளைஞர்கள் புதிய வாக்காளர்களாக உள்ளனர். இவர்கள் திமுக, அதிமுகவிற்கு முற்றுப்புள்ளி வைத்து விஜயகாந்த தலைமையிலான அணியை தேர்வு செய்வார்கள். கூட்டணி ஆட்சி அமைந்தால் லோக்ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும். ஊழல் செய்து சேர்க்கப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

தமாக மாநிலதுணைத் தலைவர் பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், தேமுதிக நிர்வாகிகள் ராயல், தட்சிணா, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் முல்லைவேந்தன், மதிமுக மாவட்டச் செயலாளர் ராமலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ராஜேஷ் கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குளோப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x