

1957 முதல் நடைபெற்ற தேர்தல்களில் ஏழு முறை அதிமுகவும், இரண்டு முறை திமுகவும், நான்கு முறை காங்கிரஸும் வென்ற தொகுதி மேட்டுப்பாளையம். 2006, 2011 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வென்ற அதிமுக ஓ.கே.சின்னராஜ், இப்போதும் அதிமுக வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். கடந்த 2 வார காலத்தில் மேட்டுப்பாளையம் நகர வார்டுகள் 33, மற்றும் கிராம ஊராட்சிகளிலும் பிரச்சாரத்தில் ஒரு ரவுண்ட் வந்து விட்டார்.
மிக எளிமையானவர். மேட்டுப்பாளையம் நகரப் பகுதியில் ஒரு சிறிய அறையை வாடகைக்கு பிடித்து தனியாக வசிப்பவர். கட்சித் தொண்டர் முதற்கொண்டு, பொதுமக்கள் வரை எளிதில் இவரை சந்திக்க முடியும். தொகுதியில் நடக்கும் வீட்டு விசேஷங்கள், துக்க நிகழ்வுகள் பெரும்பாலானவற்றில் பங்கேற்பவர். இவையெல்லாம் இவரது பலம். ஆனால் செயல்பாட்டில் திருப்தி இல்லை எனவும் கட்சி நிர்வாகிகளுடன் நெருக்கம் பாராட்டுவதும், அவர்கள் தேவைகளை நிறைவேற்றித் தருவதிலும் பின்னடைவு கண்டிருப்பதாகவும் கட்சியினரே கூறுகின்றனர்.
பவானி நதிநீர் மாசு, கிராமங்களில் வனவிலங்குகள் தொல்லை, நீண்டநாள் கோரிக்கையாக நிற்கும் கறிவேப்பிலை தொழிற்சாலை என பிரச்சினைகள் அப்படியே இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.
தவிர, ‘2 முறை இவரே எம்எல்ஏவாக இருந்து விட்டார்; இப்போதாவது வேட்பாளரை மாற்றி புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கார்டன் கதவு வரை இவருக்கு எதிராக கட்சியினர் சிலர் மனுவும் அளித்துவிட்டனர், எடுபடவில்லை. அந்த மனு கொடுத்தவர்கள் யார் என்பதே புரியாத புதிர் போல் அனைத்து நிர்வாகிகளும் இவருக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதை காண முடிகிறது. தொகுதியில் 65 சதவீதம் வசிக்கும் ஒக்கலிகர் சமூகத்தவர் என்பது இவருக்கு பலம்.
இதற்கு முன்பு வரை, திமுக முன்னாள் எம்எல்ஏ அருண்குமாரை எதிர்த்தார். அவர் ஒக்கலிகர் அல்லாதவர் என்பதாலேயே தோல்வி கண்டார் என்ற பேச்சு இன்றும் திமுகவினரிடம் உள்ளது. எனவேதான், அதே சமுதாயத்தை சேர்ந்த காரமடை ஒன்றியச் செயலாளர் சுரேந்திரன் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சுரேந்திரன், கடைகோடி கிராமமான ஆனைகட்டி மலைகிராமப் பகுதியைச் சேர்ந்தவர். எனவே நகரப் பகுதியில் தங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ‘சீட்’ கிடைக்காத அருண்குமார் மட்டுமல்லாது, இதே தொகுதியில் ‘சீட்’ கேட்டிருந்த சி.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரின் ஆதரவாளர்கள் இவருக்கு தேர்தல் வேலை செய்வார்களா? என்ற கவலையும் கட்சித் தொண்டர்களிடம் இல்லாமல் இல்லை.
அதே சமயம், இரண்டு நாட்கள் முன்பு திமுக வேட்பாளர் பிரச்சாரத்தை தொடங்கியபோது 1500-க்கும் மேற்பட்டவர்கள் விருப்பு, வெறுப்பு காட்டிக் கொள்ளாமல் கலந்து கொண்டனர். அது இவர்களுக்கு பெருத்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
மேட்டுப்பாளையம் நகரப் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் வாக்குகள் பெரும்பகுதி திமுக பக்கமே இருந்துள்ளது. ஆனால், இந்த முறை எஸ்டிபிஐ கட்சி தனித்துப் போட்டியிடுவதால் திமுகவுக்கு பலஹீனம் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல், தமாகா வேட்பாளர் டி.ஆர்.சண்முக சுந்தரத்துக்கு காங்கிரஸ் வாக்குகள் சென்றால், திமுக கூட்டணி என்பதற்கே அர்த்தமற்ற நிலை உருவாகும் என்ற ஐயமும் திமுக தரப்பில் உள்ளது.
தமாகாவில் போட்டியிடும் டி.ஆர். சண்முக சுந்தரம், ரியல் எஸ்டேட், விவசாயம் என்று ஈடுபடுபவர். காங்கிரஸ், தமாகா என்று எந்த அணியில் இருந்தாலும் பள்ளி, கல்லூரி என பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று தொடர்ந்து தன்னை முன்னிறுத்திக் கொள்பவர். எனவே இவர் தனிப்பட்ட முறையிலும் ஒக்கலிகர் வாக்குகளை பிரிக்கக்கூடும். பாஜக வேட்பாளர் ஜெகன்னாதனும், ஒக்கலிகர் சமூகத்தவர். எனவே இவரும் அச் சமூக வாக்குகளை பிரிக்கக்கூடும் என்ற பேச்சும் தொகுதியில் உள்ளது.
தற்போது இந்த தொகுதியின் மொத்த வாக்குகள் 2 லட்சத்து 73 ஆயிரத்து 728. சென்ற தேர்தலில் 25,775 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வென்றது.
தற்போது காங்கிரஸுக்கு 10 ஆயிரம் வாக்குகள், மதிமுக, கம்யூனிஸ்ட்கள் தலா 5 ஆயிரம், தேமுதிக 10 ஆயிரம் வாக்குகள் கடந்த காலங்களில் பெற்ற கணக்கு உள்ளது. அந்த வகையில், ம.ந.கூ. வாக்குகள், பாமக, பாஜக வாக்குகள் பிரிப்பு முக்கிய கட்சிகளை கவலையில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.