ஜெயலலிதா ஆட்சியில் ஏற்பட்டிருப்பது மலர்ச்சியல்ல; மக்கள் கிளர்ச்சியே: கருணாநிதி

ஜெயலலிதா ஆட்சியில் ஏற்பட்டிருப்பது மலர்ச்சியல்ல; மக்கள் கிளர்ச்சியே: கருணாநிதி
Updated on
1 min read

ஐந்தாண்டு காலத்தில் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியில் ஏற்பட்டிருப்பது வளர்ச்சியல்ல, மக்கள் கிளர்ச்சியே என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கையில், '' “ஒரு தாய்க்கு தன் பிள்ளைக்குத் தேவையானது தெரியும். எனவே உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது இந்த தாய்க்குத் தெரியும்” என்று விருத்தாசலம் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசியிருக்கிறார். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தமிழகத்து தாய்மார்கள் தன்னெழுச்சியாகப் போராடியபோது, அவர்கள் மீது காவல்துறையினர் வன்முறையை ஏவியதும், கைது செய்ததும்தான், ஒரு தாய் தனது பிள்ளைகளை நடத்தும் விதமா?

ஒரு தாயின் ஆட்சியில்தான், கடந்த மூன்று ஆண்டுகளில் 2 ஆயிரத்து 335 பெண்கல் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர். பெண்களுக்கு எதிராக இருபது ஆயிரத்துக்கும் அதிகமான குற்றங்கள் நடந்திருக்கின்றன என்பவைதான் தாயின் தகைமைக்குச் சான்றுகளா? ஒரு தாயின் கீழ்ப் பணியாற்றி வந்த தலித் பெண் போலீஸ் அதிகாரி விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டாரே ஏன்?

இப்போது நடைபெற்று வரும் மதுக்கடைகள் முதன்முதலாக அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டவைதான். ஆனால், இந்த உண்மையை அப்படியே ஒதுக்கி வைத்துவிட்டு, முதலமைச்சர் பதவியிலே இருப்பவர் ஊருக்கு ஊர் சென்று சொன்ன பொய்களையே மீண்டும் சொல்லி மக்களை ஏமாற்ற நினைப்பது சரிதானா? பொய்களைச் சொல்வதில், ஜெயலலிதாவுக்கு இருக்கும் தகுதியை யாராலும் விஞ்ச முடியாது.

தமிழகத்தில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது, மலர்ச்சி தோன்றியிருக்கிறது என்று தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா பேசி வருகிறார். இந்த ஐந்தாண்டு கால ஜெயலலிதா ஆட்சியில் தமிழகத்தில் ஏற்பட்டிருப்பது வளர்ச்சியல்ல; இதுவரை ஏற்படாத தளர்ச்சி! மலர்ச்சியல்ல; பல முனைகளிலும் மக்கள் கிளர்ச்சியே'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in