

பால் பொருட்கள் மறைமுக விலையேற்றத்துக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளதாவது:
பன்னாட்டு நிறுவனமான திருமலா பால் நிறுவனம் பால் முகவர்களுக்கு எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி 200 கிராம் தயிர் பாக்கெட்டின் அளவை 175 கிராமாக குறைத்துள்ளது. ஆனால் விற்பனை விலையைக் குறைக்காமல் இந்த மாற்றத்தை செய்துள்ளது. இந்த மாற்றத்தின் காரணமாக ஒரு லிட்டர் தயிருக்கு 8 ரூபாய் 57 காசுகள் வரை மறைமுகமாக விற்பனை விலையை உயர்த்தி பொதுமக்கள் மீதும், பால் முகவர்கள் மீதும் கடுமையான சுமையைத் தூக்கி வைத்துள்ளது இந்நிறுவனம்.
ஏற்கெனவே பன்னாட்டு நுகர்பொருள் நிறுவனங்கள் சோப், பற்பசை, பிஸ்கட், குளிர்பானங்கள் போன்ற பொருட்களின் அளவை குறைத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் வேளையில் தற்போது அத்தியாவசியப் பொரு ளான பால் மற்றும் பால் பொருட் களை தயாரித்து விற்பனை செய்யும் பன்னாட்டு நிறுவனமும் அதே முறையை கடைபிடிக்கத் தொடங்கி யுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன் பால் முகவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதியமும் கடுமையாக பாதிக்கப்படும். திருமலா பால் நிறுவனத்தின் இச்செயலை கண்டிப் பதுடன், தமிழக அரசு உடனடியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.