

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து திருநெல்வேலியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில்அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் பேசினார்.
"தமிழக மக்களுக்கு சொன்னதை நிறைவேற்றிய பிறகு, அகில இந்திய அரசியலில் ஸ்டாலின் கால் பதிக்கட்டும்” என்று, திருநெல்வேலியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் போட்டி யிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, திருநெல்வேலியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஜெயலலிதா ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகள் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமையும் சூழல் இருந்தது. ஆனால், திமுக அளித்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்தார்கள். முதல்வரானதும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்று ஸ்டாலின் சொன்னார். அதை செய்ய முடியவில்லை. பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ருபாய் என்று சொன்னார். ஆட்சிக்கு வந்து 10 மாதம் ஆகியும் கொடுக்கவில்லை. மாணவர்களின் கல்விக்கடன் ரத்து என்று சொன் னதை செய்யவில்லை. 5 சவரன் நகை கடன் தள்ளுபடி என்று அறிவித்தனர்.
இத் திட்டத்தில் பயன்பெற 13 லட்சம் பேர்தான் தகுதியுள்ளவர்கள் என்று இப்போது சொல்கிறார்கள். இதனால், 37 லட்சம் பேர் ஏமாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் கடனாளியாகவே இருக்கிறார்கள். இதற்கு திமுகவே பொறுப்பு.
அதிமுக ஆட்சியில் தரமான பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. அதுதான், நல்ல ஆட்சிக்கு அடையாளம். இப்போது திமுக கொடுத்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு முற்றிலும் தரமற்றது. அந்த பொருட்களை மாட்டுக்கு வைத்தால் மாடு முறைக்கிறது. மக்களை ஏமாற்றி மக்கள் விரோதமாக அரசு நடைபெற்று கொண்டிருக்கிறது. இத்தேர்தலில் ஒரு நல்ல தீர்ப்பு கிடைக்கும். அதிமுக வேட்பாளர்கள் 100 சதவீதம் வெற்றி பெறுவார்கள் என்ற சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. 10 மாதங்களுக்குமுன்பு தமிழக மக்க ளுக்கு சொன்னதைச் செய்துவிட்டு அகில இந்திய அரசியலில் மு.க.ஸ்டாலின் கால் பதிக்கட்டும். இவ்வாறு அவர் பேசினார்.