

வேலூர் மாவட்டத்துடன் இருந்த திருப்பத்தூர் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதி புதிய மாவட்டமாக உதயமானது. திருப்பத்தூர் மாவட் டத்தில் 4 நகராட்சிகள், 3 பேரூராட்சிகள் உள்ளன. புதிய மாவட்டமாக பிரிக்கப்பட்ட பிறகு நகர்ப்புற அமைப்புகளுக்கான முதல் தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற இருப்பதால் நகராட்சி நிர்வாகங்களை கைப் பற்றும் போட்டியில் திமுகவும், அதிமுகவும் முன்னணி வகிக் கின்றன.
தமிழகத்திலேயே பழமை யான நகராட்சி என்ற பெயரை திருப்பத்தூர் நகராட்சி பெற் றுள்ளது. கடந்த 1886-ம் ஆண்டு திருப்பத்தூர் நகராட்சி தோற்று விக்கப்பட்டது. 1970-ம் ஆண்டு 2-ம் நிலை நகராட்சியாகவும், 1977-ம் ஆண்டு முதல் நிலை நகராட்சியாகவும், கடந்த 2008-ம் ஆண்டு முதல் இதுவரை தேர்வு நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. சுமார் 1.30 லட்சம் மக்கள் தொகை கொண்ட பெரிய நகராட்சியாக திருப்பத்தூர் நகராட்சி விளங்கி வருகிறது.
36 வார்டுகளை கொண்ட திருப்பத்தூர் நகராட்சியின் தலைவர் பதவி இந்த முறை எஸ்சி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 36 வார்டு கவுன்சிலர் பதவியை கைப்பற்ற 164 பேர் போட்டியிடுகின்றனர். திருப்பத்தூர் நகராட்சியில் மொத்தம் 67,110 வாக்காளர்கள் உள்ளனர்.
திருப்பத்தூர் தேர்வு நிலை நகராட்சியாக விளங்கினாலும் உட்கட்டமைப்பு வசதி மேம் படுத்தப்படாமல் இருப்பது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி நிர்வாகம் சார்பில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப் படாமல் இருப்பது பெரும் குறை யாகவே பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, இங்குள்ள படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் வேலை வாய்ப்பு பெற வேண்டுமென்றால் சென்னை, பெங்களூரு, ஓசூர், கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளுக்கு செல்கின்றனர். தொழில் வளத்தை திருப்பத்தூரில் மேம்படுத்தவேண்டும் என்ற மக்களின் நீண்ட நாள் கோரிக்கை கிடப் பிலேயே உள்ளது. அது மட்டு மின்றி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெரிய ஏரி தூர்வாரப்படாமல் இருப்பதால் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருவதாக மக்கள் குற்றஞ்சாட்டு கின்றனர்.
எங்கு பார்த்தாலும் குப்பைக் கழிவுகள் குவிந்து கிடப் பதாகவும், தெரு மின் விளக்குகள் எரியாமலும், குடிநீர் தட்டுப்பாடு தலை விரித்தாடுவதாகவும், சீரான சாலை வசதி இல்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டு களை பொதுமக்கள் முன் வைக் கின்றனர். பாதாள சாக்கடை திட்டப் பணிகள் இன்னும் பல வார்டுகளில் முடிக்கப்படாமல் கிடப்பில் உள்ளதாகவும், அதற்கான தோண்டப்பட்ட சாலைகள் சரிவர மூடாததால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டும், மழை காலங்களில் தண்ணீர் சாலைகளில் குட்டைப்போல் தேங்குவ தாக மக்கள் ஆதங்கப்படு கின்றனர்.
அதேபோல, அரசு மகளிர் கல்லூரி திருப்பத்தூரில் அமைக்க வேண்டும், அரசு தலைமை மருத்துவமனை தரம் உயர்த்தப் படாலும், அறுவை சிகிச்சைக்கு பக்கத்து மாவட்டங்களுக்கு நோயாளிகள் செல்ல வேண்டிய நிலை இருப்பதாக இப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். நகராட்சிக்கு உட்பட்ட 4 இடங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், 36 வார்டுகளிலும் குப்பைக்கழிவுகள் தினசரி அகற்றப்படாததால் பொது சுகாதாரம் கேள்விக்குறி யாகவே உள்ளதாக மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
இது போன்ற பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாகவும், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைவில் செய்து தருவதாக வாக்குறுதி அளித்து அதிமுக, திமுக, பாமக, பாஜக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.