

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தல் அவசியமற்றது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
வேலூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘எல்.ஐ.சி தனியார் மயமாக்கப்படும் என அறிவித் ததில் இருந்து நாங்கள் போராடி வருகிறோம். அதை முதல்வர் இன்று (நேற்று) பேசியுள்ளார். எல்.ஐ.சி. தனியார் மயமாக்கலை மத்திய அரசு கைவிட வேண்டும் என முதல்வர் கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
மத்திய அரசு லாபத்தில் இயங்கும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் விற்கிறோம் என்கிறார்கள். இழப்பில் போகும் தனியார் நிறுவனங்களை அரசே ஏற்கும் என்கிறார்கள். இது எந்த மாதிரியான ஆட்சி முறை என்றே தெரியவில்லை. எல்.ஐ.சி தனியார் மயமாக்குவதை அனுமதிக்கக்கூடாது. இதில் எங்களை போலவே போராட்டம், ஆர்ப்பாட்டம் செய்யாமல் 39 எம்.பி.,க்களை வைத்துள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் தீவிரமாக எதிர்க்க வேண்டும்.
அதிமுக, திமுக என இரண்டு கட்சியுமே உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்துவதில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தல் அவசியமற்றது. நேரடியாக மேயரை தேர்ந்தெடுக்க வேண்டும். மறைமுக தேர்தல் பேரத்துக்கே வழிவகுக்கும்’’ என்றார்.