

விவசாய நலனுக்கான விண்ணில் 3 செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தி உள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நன்றி மற்றும் பாராட்டு தெரிவித்து உழவர் பேரவை சார்பில் செய்யாறு புதுப்பாக்கத்தில் நேற்று பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஹரி கோட்டாவில் இருந்து 3 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட், விண்ணில் நேற்று முன் தினம் வெற்றிகரமாக ஏவப்பட்டு நிலை நிறுத்தப்பட்டுள்ளது. வேளாண், மண்ணின் ஈரப்பதம் மற்றும் நீர்வளம் போன்றவற்றுக்கு தேவை யான உயர்தர வரைபடங்களை அனைத்து கால நிலைகளிலும் எடுத்து அனுப்பும் திறன்கொண்டது.
இந்நிலையில் விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் செயற்கைக்கோள்களை ராக்கெட் மூலம் வெற்றி கரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு நன்றி மற்றும் பாராட்டு தெரிவித்து உழவர் பேரவை சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு புதுப்பாக்கத்தில் நேற்று இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. மாவட்டத் தலைவர் புருஷோத் தமன் தலைமை வகித்தார். பட்டாசு வெடித்தும், பொதுமக்கள் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
அப்போது அவர் கூறும்போது, “பருவ நிலை மாற்றங்களால், தேசிய அளவில் ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி பொருளா தார சேதம் ஏற்படுகிறது. கால நிலைமாற்றங்களை முன் கூட்டியே அறிந்து தடுக்கும் வகையில்செயற்கைக்கோளை நேற்று (நேற்று முன்தினம்) செலுத்தி, விவசாயிகளுக்காக இஸ்ரோ ஆய்வு மையம் அர்ப்பணித் துள்ளது.
இதன்மூலம் நிலவளம், நீர் வளம், பருவ கால மாற்றம், புயல், வெள்ளம், மழை, வறட்சி ஆகிய இடர்பாடுகளை முன் கூட்டியே துல்லியமாக கணக்கிட்டு வழங்கும். குறிப்பிட்ட சர்வே எண்ணின் சாகுபடி, மகசூல் விவரம், மண் வளம், நிலத்தடி நீர் இருப்பு விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பொருளாதார பலன் பெற முடியும். இதற்கான முயற்சியை மேற்கொண்டு வெற்றி கரமாக செய்து முடித்த இஸ்ரோ ஆய்வு மைய விஞ்ஞானிகள் மற்றும் மத்திய அரசுக்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள்” என்றார்.