Published : 17 Apr 2016 02:53 PM
Last Updated : 17 Apr 2016 02:53 PM

மதுவும் மின்துறை குளறுபடிகளும் தான் தமிழகத்தை சீரழித்தன: ஸ்டாலின்

மதுவும் மின்சாரத்துறை குளறுபடிகளும் தான் தமிழ்நாட்டை சீரழித்தன என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டத்தில் கழக வேட்பாளர்களை ஆதரித்தும், திமுக தேர்தல் அறிக்கையை விளக்கியும் பேசியதாவது:

''கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது வானத்தை கிழப்போம்-வைகுண்டத்தை காட்டுவோம், மணலை கூட கயிறு திரிப்போம் என்று சொன்னவர் ஜெயலலிதா. 110 விதிகள் மூலம் சட்டமன்றத்தில் தந்த உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை.

திமுக ஆட்சியில் அனைத்து முதியோருக்கும் வழங்கப்பட்ட உதவித் தொகையை அதிமுக ஆட்சி நிறுத்தி விட்டது. திமுக ஆட்சி அமைந்ததும் தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் உதவித் தொகை வழங்கப்படும். இப்போதுள்ள 1000 ரூபாய் உதவித்தொகை 1300 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். 60 வயதுக்கு மேல் உள்ளோருக்கு அரசின் சாதாரண பேருந்துகளில் கட்டணமில்லாப் பயண சலுகை அளிக்கப்படும். மாவட்டத் தலைநகரங்களில் முதியோர் இல்லங்கள் அமைத்து உணவு, உடை, உறைவிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.

மாவட்ட தலைமை மருத்துவமனையில் முதியோருக்கு சிகிச்சை அளிக்க தனிப் பிரிவு தொடங்கப்படும். ஆவின் நிறுவனம் மூலம் வழங்கப்படும் பாலின் விலையில் லிட்டர் ஒன்றுக்கு 7 ரூபாய் உடனடியாக குறைக்கப்படும். கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் பால் முழுவதையும் ஆவின் நிறுவனமே கொள்முதல் செய்யும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய பால் உற்பத்தியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கொண்ட குழு நியமிக்கப்படும். ஆவின் விலை குறைப்பால் பால் உற்பத்தியாளர்களுக்கு எந்தவித கொள்முதல் விலை குறைப்பும் இல்லாதவாறு உறுதிசெய்யப்படும்.

இந்த 5 ஆண்டுகளில் மின்சாரக் கட்டணமும் கடுமையாக உயர்ந்து விட்டது. மது பாட்டில் விலையும் ஏறிவிட்டது. மதுவுக்கும் நத்தம் விஸ்வநாதன் தான் அமைச்சர். மின் துறைக்கும் இவர் தான் அமைச்சர். இந்த இரண்டு துறைகளாலும் தான் நாடே அழிந்தது. கடைசி சட்டமன்றக் கூட்டத்தொடரில் மதுவிலக்குக்காக பேசிய போது டாஸ்மாக்கை மூட முடியாது என மறுத்தார் நத்தம் விஸ்வநாதன். படிப்படியாக குறைப்பீர்களா என்று கேட்ட போதும், ஒரு கடை கூட முடியாதென கைவிரித்தவர் தான் இந்த தொகுதி அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன்.

முன்பு திமுக ஆட்சியில் 1 மணி நேரம் டாஸ்மாக் நேரம் குறைக்கப்பட்டது. பிறகு கோயில்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றின் அருகில் இருந்த மதுக்கடைகள் படிப்படியாக அகற்றப்பட்டன. ஆனால் அதிமுக அரசு பொறுப்பேற்றதும் பள்ளிகள், கல்லூரிகள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு தெரு முனையிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

அதனால் பல குடும்பங்கள் மதுப் பழக்கத்தால் நடுத்தெருவுக்கு வந்தன. பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மதுவுக்கு அடிமையாகி தள்ளாடிய சம்பவமும் நடைபெற்றது. இதையெல்லாம் அறிந்த கருணாநிதி உடனடியாக மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இப்போது தேர்தல் அறிக்கையிலும் அதை வெளியிட்டுள்ளார்.

மாவட்டம் முழுக்க குடிநீர் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. அதை பற்றி ஜெயலலிதாவுக்கோ, இந்த ஆட்சியில் இருப்பவர்களுக்கோ கவலையில்லை. இதே நத்தம், நிலகோட்டை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் திமுக ஆட்சியால் கொண்டு வரப்பட்ட மூன்றாவது கூட்டுக் குடிநீர் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ள ஆட்சி தான் ஜெயலலிதா ஆட்சி.

திமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்ட 636 கோடி ரூபாய் வீணாக போகிறது. அதிலும் இந்த ஆட்சி கொள்ளை அடிக்கிறது. காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படும் என்று 2 முறை அறிவிக்கப்பட்டும் இதுவரை செயல்படுத்தப்பட வில்லை. காமராஜர் நீர்த்தேக்கத்தை தூர் வாரி, விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக அரசு செயல்படுத்த முன்வரவில்லை'' என்று ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x