Last Updated : 15 Feb, 2022 05:33 PM

 

Published : 15 Feb 2022 05:33 PM
Last Updated : 15 Feb 2022 05:33 PM

தமிழக ஆளுநர், பிரதமரை சீண்டுவது பொறுப்புமிக்க அரசுக்கு அழகல்ல: அண்ணாமலை

தஞ்சாவூரில்  நெசவு நூல் காயவைக்கும் நெசவாளர்களிடம், பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை வாக்குசேகரித்தார்.

தஞ்சாவூர்: "தமிழக ஆளுநர், பிரதமரை சீண்டுவது போன்றவை பொறுப்புமிக்க அரசுக்கு அழகல்ல" என பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவி்த்தார்.

தஞ்சாவூரில் இன்று பாஜக வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக் கூட்டத்தில், மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது: ”பாஜகவுக்கு மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது. அதேநேரத்தில் திமுக அரசு மீது மக்களிடையே சலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தைக் கூறி வருகின்றனர். இதற்காக திமுகவினர் வீடு, வீடாகச் செல்கின்றனர். இதற்கான அரசாணையோ, பட்ஜெட்டோ போடாமல் பணத்தை உடனடியாகக் கொடுக்கப் போகிறோம் எனக் கூறுவது முற்றிலும் ஏமாற்று வேலை.

இது பற்றி இதுவரையிலும் பேசாத திமுக, இப்போது பேசத் தொடங்கியிருக்கிறது என்றால், மக்களின் கோபம் அவர்கள் மீது திரும்பிவிட்டது என்பது தெரிய வருகிறது. ஒரு பொய்யை மறைப்பதற்காக இன்னொரு பொய்யைப் பேசுகின்றனர். ஆனால், இந்த முறை மக்கள் ஏமாறமாட்டார்கள்.

மத்திய அரசின் சாதனைகளை அனைத்து வீடுகளுக்கும் கொண்டு சேர்த்துள்ளோம். திட்டப் பயனாளிகள் எல்லா வீடுகளிலும் இருப்பதால், பாஜகவுக்கு எழுச்சி இருக்கிறது. திமுகவை பொறுத்தவரை ஒவ்வொரு மாதமும் ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு பேசுவர். ஜனவரி மாதம் குடியரசு தின விழா ஊர்தி குறித்து பொய்யான ஒரு படம் போட்டனர். அதை மக்கள் மறந்தவுடன் நீட் பிரச்னையை எடுத்து பேசுகின்றனர். இந்தத் தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி மாலை முடிந்தவுடன், திமுக புதிதாக இன்னொரு தலைப்பை எடுத்து பேசும். இதையெல்லாம் தமிழக மக்கள் முழுமையாக உணர்ந்துவிட்டனர்.

திமுக சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் கூறிய 517 வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை, எனவே கனவில் கூட நீங்கள் திமுகவுக்கு வாக்களிக்களித்து விட வேண்டாம்” என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”தமிழக ஆளுநர், பிரதமரை சீண்டுவது போன்றவை பொறுப்புமிக்க அரசுக்கு அழகல்ல. எனவே வருகிற தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழக மீனவர் மீது எங்கேயும் துப்பாக்கிச்சூடு இல்லை. இத்தனை காலம் பிரச்சினை இல்லாத நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இப்போது எப்படி வருகிறது. எனவே, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இது ஏன் தொடர்ந்து நடைபெறுகிறது என அவர்கள்தான் ஆத்மார்த்தமாக சொல்ல வேண்டும். என்றாலும், அனைத்து மீனவர்களையும் மீட்டுக் கொண்டு வந்து விடுவோம்” என்றார் அண்ணாமலை.

முன்னதாக, அப்பகுதியில் நெசவுத் தறிக்கான நூலை வெயிலில் காயவைக்கும் நெசவாளர்களை பார்வையிட்டு, அவர்களிடம் வாக்கு சேகரித்தார்.

இக்கூட்டத்தில் பாஜக தேசியப் பொதுக் குழு உறுப்பினர் எம்.எஸ். ராமலிங்கம், மாநிலத் துணைத் தலைவர் கருப்பு எம். முருகானந்தம், மாவட்டத் தலைவர் ஆர்.இளங்கோ, மாவட்ட பொதுச் செயலர் பி.ஜெய்சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே போல் கும்பகோணத்திலும் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்து, வேட்பாளர்களை அண்ணாமலை அறிமுகப்படுத்தி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x