Published : 15 Feb 2022 04:33 PM
Last Updated : 15 Feb 2022 04:33 PM

"திமுகவும் அதிமுக தேர்தலை நேர்மையாகச் சந்திப்பது இல்லை" - குற்றச்சாட்டுகளை அடுக்கி சீமான் ஆவேசம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேலூர் மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். படங்கள்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்: "திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே தேர்தலை நேர்மையாக நடத்துவம் இல்லை, தேர்தலை சந்திப்பதும் இல்லை" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேலூர் மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே தேர்தலை நேர்மையாக நடத்துவதில்லை, சந்திப்பது இல்லை. இரண்டு கட்சிகளும் இது தொடர்பாக மாறிமாறி குற்றம்சாட்டிக் கொண்டாலும், இரண்டு கட்சிகள் கூறுவதிலும் உண்மையிருக்கிறது. பல்வேறு இடங்களில் வேட்பாளர்களை மிரட்டி வேட்புமனுக்களை திரும்ப பெற வைத்த ஆளுங்கட்சியின் செயலை, சர்வாதிகாரப் போக்கு என்று கூற முடியாது. அது ஆட்சியதிகாரத் திமிர், கொடுங்கோண்மை. அதிகார வலிமையைப் பயன்படுத்தி அச்சுறுத்தி வேட்பாளர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 60 பேரை வேட்புமனுக்களை திரும்பபெற வைத்துவிட்டனர். திமுக எப்போதும் இதைத்தான் செய்யும்.

மாநகராட்சித் தேர்தலில் மறைமுக தேர்தல் அவசியமற்றது. நேரடி தேர்தல்தான் சரி. யார் என்னுடைய மாநகராட்சியின் மேயராக வரப்போகிறார் என்று தெரியாமல், எப்படி வாக்களிப்பது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாமன்ற உறுப்பினர்களால் மேயர் தேர்வு செய்யப்படுவார் என்றால், அதற்காக எவ்வளவு பெரிய பேரம் நடக்கும். இது ஜனநாயகமா? பணநாயகமா? இந்த நிலையை மாற்ற வேண்டும்.

தேர்தல் நேரத்தில்தான், நீட் தேர்வு குறித்து பேசப்படும், பாஜக கார் எரியும், அலுவலகத்தில் குண்டு வெடிக்கும், காவித்துண்டு உடுத்திக்கொண்டு கல்லூரிக்குச் செல்வார்கள் இப்படி எல்லாமே நடக்கும். இதுதான் இங்குள்ள பிரச்சினை. தேர்தல் நேரங்களில், இவற்றை பயன்படுத்திக் கொண்டு இந்த கீழான உணர்ச்சியை கிளறிக் கிளறி அதிகாரத்துக்கு வந்துவிடுகின்றனர்.

ஆளுநரை திரும்ப பெற தமிழக அரசு கூறினால், திரும்ப பெற்று விடுவார்களா? வித்யாசாகர் ராவ் ஆளுநராக இருந்தபோது, சசிகலா பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு கூறினார். ஆனால், அவர் டெல்லிக்குச் சென்று படுத்துக்கொண்டார். அவரை யாரால் என்ன செய்ய முடிந்தது? எல்ஐசி தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிரான முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது" என்று சீமான் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x