திருச்சியில் வாக்குச்சாவடிகளுக்கு கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

திருச்சியில் வாக்குச்சாவடிகளுக்கு கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

Published on

திருச்சி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நாளில், கரோனா பரவலை தடுக்கும் வகையில் திருச்சியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பும் பணி இன்று தொடங்கியது.

திருச்சி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகள் ஆகியவற்றில் உள்ள 401 வார்டு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புத் தேர்தல் பிப்.19ம் தேதி நடைபெறவிருகிறது. இந்தத் தேர்தலுக்காக திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 1,262 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனிடையே, துறையூர் நகராட்சி 10-வது வார்டு, தாத்தையங்கார்பேட்டை பேரூராட்சி 8-வது வார்டு, தொட்டியம் பேரூராட்சி 13-வது வார்டு ஆகியவற்றில் 3 பேர் போட்டியின்றி வெற்றி பெற்றனர். இதனால், தற்போது திருச்சி மாவட்டத்தில் 1,258 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது.

வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்கள், வாக்களிக்க வரும் வாக்காளர்கள் ஆகியோர் கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்காக கை சுத்திகரிப்பான், முகக்கவசம், கையுறை, முழு கவச ஆடை, வெப்பநிலை பரிசோதிக்கும் வெப்பமானி உள்ளிட்ட கரோனா பரவல் தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தொடங்கியது.

இப்பணியை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சித் தேர்தல்) மகாலிங்கம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மகாலிங்கம் ஆய்வு பணி குறித்து கூறீயதாவது: மாநில தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவின் பேரில் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 1,258 வாக்குச்சாவடிகளுக்கும் கரோனா பரவல் தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பப்படவுள்ளன. இவை, அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களுக்குக் கொண்டுச் செல்லப்பட்டு, வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளில் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பபடும்" என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in