திருப்புதல் தேர்வு வினாத்தாள் ’அவுட்’ ஆன விவகாரம்: திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

அருள்செல்வம்
அருள்செல்வம்
Updated on
1 min read

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் சமூக வலைதளங்கள் மூலம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் அம்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம் இன்று (பிப்.15) பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 9-ம் தேதி முதல் ‘திருப்புதல் தேர்வு’ நடத்தப்படுகிறது. இந்நிலையில், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான வினாத்தாள், சமூக வலைதளங்களில் வெளியாகி செய்யாறு, போளூர் மற்றும் வந்தவாசி பகுதியில் வசிக்கும் மாணவர்களிடையே கடந்த வாரம் பகிரப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு தேர்வுத் துறை இணை இயக்குநர் பொன்.குமார், வந்தவாசி மற்றும் போளூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் கடந்த 14-ம் தேதி ஆய்வு செய்துள்ளார். தலைமை ஆசிரியர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் அவர், தனது விசாரணை அறிக்கையை அரசு தேர்வுத் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறைக்கு சமர்ப்பித்துள்ளார்.

இதையடுத்து பள்ளிக் கல்வித் துறை ஆணையர் க.நந்தகுமார் கடந்த 14-ம் தேதி இரவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சமூக வலைதளங்களில் திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் வெளியானது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஆக்சிலியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் வந்தவாசி ஹாசினி இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியானது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணமான பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அரசு தேர்வுத் துறையின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாத அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம், இன்று (15-ம் தேதி) பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை தரப்பில் கேட்டபோது, “திருப்புதல் தேர்வு நடைபெறும் நாளில் மட்டுமே வினாத்தாள்களை, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பிவைக்க வேண்டும். ஆனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு வாரத்துக்கு முன்பாக, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள்களை முதன்மைக் கல்வி அலுவலர் அனுப்பி வைத்துள்ளார்” என்றனர். பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம், 5 மாதங்களில் பணி நிறைவு பெற இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய சிஇஓ நியமனம்: இதற்கிடையில், திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக (முழு கூடுதல் பொறுப்பு) விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கோ.கிருஷ்ணபிரியா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) முனைவர் பூ.ஆ.நரேஷ் பிறப்பித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in