Published : 15 Feb 2022 02:57 PM
Last Updated : 15 Feb 2022 02:57 PM

முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட ஏபிவிபி முயற்சி: தமிழக காங்கிரஸ் கண்டனம்

கோப்புப் படம்

சென்னை: “என்றைக்குமே தமிழகத்தில் பாஜக நுழைய முடியாது என்ற ராகுல் காந்தியின் கூற்று உறுதிப்படுகிற வகையில் தமிழக பாஜக செயல்பட்டு வருகிறது. அதற்கு மோடி அரசு துணை போகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். மேலும், "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட பாஜகவின் மாணவர் பிரிவான ஏபிவிபி அமைப்பினர் போராட்டம் நடத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இவ்வழக்கை பொறுத்தவரை, தற்கொலை நிகழ்ந்தவுடனே தமிழக காவல்துறையின் சிபிசிஐடி சரியான திசையில் விசாரணையை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தமிழக அரசின் கருத்தை முழுமையாக அறியாமல் நீதிபதி சுப்பிரமணியம் வழக்கை சிபிஐ விசாரிக்க ஆணையிட்டார்.

இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது. இந்த உத்தரவு தமிழக பாஜகவிற்கு கிடைத்த வெற்றியாகக் கருதி அண்ணாமலை மகிழ்ச்சிக் கடலில் நீந்த முற்பட்டிருக்கிறார். எந்தப் பிரச்சினையை கையில் எடுத்தாலும் கையை சுட்டுக் கொள்கிற அண்ணாமலை, இந்த பிரச்சினையை மிகப் பெரிய வெற்றியாக நினைத்து புளகாங்கிதம் அடைகிறார்.

தமிழக அரசை பொறுத்தவரை, மடியில் கனம் இல்லாததால் சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறது. வழக்கில் உண்மை வெளியே வர வேண்டும். தமிழக அரசின் சிபிசிஐடி விசாரித்தாலும், சிபிஐ விசாரித்தாலும் உண்மைநிலை வெளிப்பட வேண்டும். இதில் பாஜக மகிழ்ச்சியடைய என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.

சமீபத்தில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அதற்குப் பிறகும் இதில் மிகப்பெரிய சதி நடந்திருப்பதாக அண்ணாமலையும், மற்றவர்களும் கற்பனைகளை நாள்தோறும் அவிழ்த்து விடுகிறார்கள். இதை வைத்துக் கொண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடலாம் என பாஜக கனவு காண்கிறது. ஆனால், மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் எத்தகைய படுதோல்வியை தமிழக மக்கள் பாஜக, அதிமுகவிற்கு வழங்கினார்களோ, அதைவிட கூடுதலான தோல்வியை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும்; வழங்கப் போவது உறுதி. இதன் மூலம் உரிய பாடத்தை பாஜக, அதிமுக பெறப் போகிறது.

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் மதுரை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும், தமிழக முதல்வர் வீட்டை முற்றுகையிட பாஜக-வின் மாணவர் பிரிவான ஏபிவிபி அமைப்பினர் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். எந்த பிரச்சினையிலும் தமிழக மக்களின் கவனத்தை ஈர்ப்பத்தில் படுதோல்வி அடைந்து வருகிற தமிழக பாஜக, இப்பிரச்சினையை கையில் எடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களது வீட்டை முற்றுகையிட முயன்றது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயலாகும். உச்ச நீதிமன்றத்தில் உரிய ஆணை வழங்கிய பிறகும் முதலவரிடம் நீதி கேட்டு போராடுவது எந்த வகையிலும் ஏற்கக் கூடியது அல்ல. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மத்தியில் மோடி தலைமையில் நடைபெறும் ஆட்சி இன்னும் 80 ஆண்டுகள் நீடிக்க வேண்டுமென்று மக்கள் நினைப்பதாக அண்ணாமலை பேசியிருக்கிறார். அண்ணாமலையின் கற்பனை எல்லை இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. எட்டு ஆண்டுகால பாஜக ஆட்சியில் நாட்டு மக்கள் படும் துன்பத்திற்கு அளவே கிடையாது. இந்தியாவில் கரோனா தொற்றினால் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மடிந்திருக்கிறார்கள். விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், வரலாறு காணாத வகையில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகவே இருக்கிறது. திமுகவின் எட்டு மாத ஆட்சியில் மக்கள் சலிப்படைந்ததாகக் கூறுகிறார்.

ஆனால், எட்டு மாதங்களில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தி வருகிற ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு ஒவ்வொரு நாளும் மக்களின் ஆதரவு பெருகி வருகிறது. மக்கள் நலன் சார்ந்த பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. இதனால், நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வரலாறு காணாத வெற்றியை தமிழக மக்கள் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். அதேநேரத்தில், பாஜகவை தமிழகத்தில் வேரூன்ற முடியாமல் மக்கள் புறக்கணித்து வருகிறார்கள். தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கிற நீட் தேர்வை ஆதரிக்கின்ற தமிழக விரோத கட்சியாக பாஜக செயல்பட்டு வருகிறது. என்றைக்குமே தமிழகத்தில் பாஜக நுழைய முடியாது என்ற ராகுல் காந்தியின் கூற்று உறுதிப்படுகிற வகையில் தமிழக பாஜக செயல்பட்டு வருகிறது. அதற்கு மோடி அரசு துணை போகிறது.

எனவே, தமிழக மக்களின் நலனிற்கு விரோதமாக செயல்படுகிற அண்ணாமலை, எந்தப் பிரச்சினையை கையில் எடுத்தாலும் எந்தவித பலனும் கிடைக்காமல் அவருக்கு எதிராகவே போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் எதிர்காலமே இல்லாத ஒரு கட்சியாக பாஜக விளங்கி வருகிறது. இதை அண்ணாமலை உணர வேண்டும்” என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x