

‘தி இந்து’ நாளிதழ் சார்பில் நடத்தப்படும் ‘கார் ஃப்ரீ சண்டேஸ்’ நிகழ்ச்சி மூலம், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை எட்டும் முயற்சியாக தொடர் விழிப்புணர்வு பிரச்சாரம் அளிக்கப்பட்டு வருவது பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியாக, ‘தி இந்து’ நாளிதழ், கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாநகரப் போக்குவரத்து காவல்துறை ஆகியவை இணைந்து ‘கார் ஃப்ரீ சண்டேஸ்’ நிகழ்ச்சியை கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடத்தி வருகிறது.
கோவை என்.எஸ்.ஆர். சாலையில் ஞாயிறுதோறும் காலை 6.30 மணிக்கு தொடங்கி காலை 9 மணி வரை நடைபெறுகிறது. 9-வது வாரமாக நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே திரண்டு உற்சாகமாக பங்கேற்றனர்.
என்.எஸ்.ஆர். சாலையில் மக்கள் கூட்டத்துக்கு மத்தியில் பல்வேறு நிகழ்ச்சி, விளையாட்டுகளுடன் நேற்றைய ஞாயிறு களைகட்டத் தொடங்கியது. ‘கார் ஃப்ரீ சண்டேஸ்’ நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட மேடையைச் சுற்றி பார்வையாளர்கள் சூழ்ந்து நின்று கைதட்டலுடன் உற்சாகம் கொடுத்தனர்.
நேற்றைய ‘கார் ஃப்ரீ சண்டேஸ்’, சி.எம்.எஸ். கல்லூரியைச் சேர்ந்த மாணவி மதுவின் மிமிக்ரியுடன் தொடங்கியது. பலவிதமான குரல்களில் பேசி பார்வையாளர்களை அவர் அசத்தினார். தொடர்ந்து, ஏ.ஆர்.ரகுமான் இசைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் அபி, பீட் பாக்ஸிங் எனப்படும் பலவிதமான மியூசிக் கருவி சப்தங்களை வெறும் வாய் மூலமாக செய்து காட்டினார். அவரது முயற்சிக்கு பார்வையாளர்கள் பலத்த கைத்தட்டல் கொடுத்து உற்சாகப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, வி.எல்.பி. கலைக் கல்லூரி மாணவர்களின் ‘மைமிங்’ எனப்படும் பேசாமல், உடல் அசைவுகள் மூலமாக பல்வேறுவிதமான விஷயங்களை தத்ரூபத்துடன் நடித்துக் காட்டினர். சி.எம்.எஸ். கல்லூரி மாணவர்களின் கரோக்கி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. வெவ்வேறு பாடல்களை வளரும் பாடகர்கள் பாடி சுற்றி இருந்தவர்களை நடனமாட வைத்தனர்.
இதையடுத்து, பித்தோவன் உடற்பயிற்சி மையம் சார்பில் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. ஜே.சி.டி. கல்லூரி மாணவர்கள் நடனம் ஆடி அசத்தினர். நேபாளத்தைச் சேர்ந்த பிரிசரத், ஜெகதீஷ் ஆகிய இருவரும் தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக நகைச்சுவையாக பப்ஃபூன் வேடமிட்டு நடித்துக் காட்டி பலத்த கைத்தட்டல்களை பெற்றனர்.
ஆள்காட்டி விரல் மூலமாக ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம் என்ற கருத்தின் அடிப்படையில் அவர்கள் நடித்துக் காட்டி அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். வாக்குரிமையை அனைவரும் தவறாமல் பயன்படுத்த ‘தி இந்து’ நாளிதழ் சார்பில் வாக்குப்பதிவை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.
இதைத்தவிர, ‘தி இந்து’ நாளிதழ் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள பாடல் மூலமாக ‘கார் ஃப்ரீ சண்டேஸ்’ நிகழ்ச்சியில் ரஞ்சித் குழுவினர் நடனம் ஆடி விழிப்புணர்வு வழங்கி வருகின்றனர். இவ்வாறு, சமூக அக்கறையுடன் விழிப்புணர்வு வழங்கி வருவதற்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த வாரம் நடந்த நிகழ்ச்சியில், ஆர்த்தோ ஒன் மருத்துவமனை சார்பில் உடல் மற்றும் உறுப்புகளின் ஆற்றல் குறித்து அறிந்து கொள்ளும் விதமாக ‘ஸ்விஸ் பந்து உடற்பயிற்சி’ முறை செய்து காட்டப்பட்டது. ஒரு பெரிய பந்தில் ஒருவரை அமர வைத்து அவரால் எந்த பிடிமானமும் இல்லாமல் தன்னுடைய ஆற்றல் மூலமாக நீடித்து அமர முடிகிறதா என்பதை பரிசோதித்து பிஸியோதெரபி மருத்துவர் கே.கணேசன் தலைமை யிலான மருத்துவர்கள் பொதுமக் களின் உடற்சார்ந்த பிரச்சினைகளை குறிப்பிட்டனர். தொடர்ந்து, அந்த பிரச்சினை சரி செய்வதற்கான தீர்வுகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில், பரமபதம், வண்ணப்போட்டி, ஓவியப்போட்டி, இறகுப்பந்து, கைப்பந்து, சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி மற்றும் போட்டிகளில் ஆர் வத்துடன் சிறியவர்களும், பெரிய வர்களும் கலந்து கொண்டனர்.
ஜெகநாத் ஜவுளி நிறுவனம் சார்பில் இலவச நீர்மோர் வழங்கப்பட்டது.
படங்கள்:ஜெ.மனோகரன்