Published : 15 Feb 2022 08:46 AM
Last Updated : 15 Feb 2022 08:46 AM
சென்னை: சம்பள பிரச்சினையால் யுஎன்ஐ செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞர், அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பத்திரிகை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே யுஎன்ஐ செய்தி நிறுவனத்தின் சென்னை கிளை உள்ளது. இங்கு கடந்த 30 ஆண்டுகளாக குமார்(56) என்பவர் புகைப்படக் கலைஞராக பணிபுரிந்து வந்தார். சென்னை கிளையின் தலைமை நிர்வாகியாகவும் குமார் இருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் நுங்கம்பாக்கம் லேக் வியூ சாலையில் உள்ள அலுவலகத்தில் தூக்கு மாட்டிய நிலையில் குமார் இறந்து கிடந்தார். நுங்கம்பாக்கம் போலீஸார் அவரது உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குமாருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகளுக்கு திருமண ஏற்பாடுகளை குமார் செய்து வந்தார்.
குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். யுஎன்ஐ செய்தி நிறுவனம் கடந்த சில மாதங்களாக குமாருக்கு மாத சம்பளத்தை முறையாக வழங்கவில்லை. இதனால் நிதி நெருக்கடி ஏற்பட்டு குமார் மனஅழுத்தத்தில் இருந்துள்ளார். குடும்பத்தின் அத்தியாவசிய தேவைக்குகூட பணம் இல்லாமல் நெருக்கடி ஏற்பட்டதால் அவர் தற்கொலை செய்திருக்கிறார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ரூ.3 லட்சம் நிவாரணம்
புகைப்படக் கலைஞர் மரணத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘30 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை புகைப்படக் கலைஞராக பணியாற்றிய டி.குமார் அகால மரணமடைந்த செய்தி அறிந்து துயருற்றேன். அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த புகைப்படக் கலைஞரின் குடும்ப சூழ்நிலை கருதி, சிறப்பு நேர்வாக பத்திரிகையாளர் நல நிதியத்தில் இருந்து ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
புகைப்படக் கலைஞர் குமார் மறைவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பழனிசாமி: குமார் மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எந்த சூழ்நிலையிலும் செய்தியாளர்கள் இதுபோன்ற தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
ஓ.பன்னீர்செல்வம்: குமார் மரண செய்தி கேட்டு மிகுந்த துயரம் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னைபத்திரிகையாளர் மன்றமும் இரங்கல் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT