

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் வரும் 17-ம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைந்து, 19-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 22-ம் தேதி 268 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை 268 மையங்களில் வரும் 22-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 5,794 வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகள் லயோலா கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், பச்சையப்பன் கல்லூரி உள்ளிட்ட15 மையங்களில் எண்ணப்படுகின்றன. 268 வாக்கு எண்ணும் மையங்கள் குறித்த விவரங்கள் மாநில தேர்தல் ஆணையத்தின் https://tnsec.tn.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
2.50 கோடி வாக்காளர்கள்
இத்தேர்தலில் 2 கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க உள்ளனர். வார்டு வாரியாக பிரதான மற்றும் துணைவாக்காளர் பட்டியல்களை மாநிலதேர்தல் ஆணையம் அதன்இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்திவாக்காளர்கள் தங்கள் பெயர்,எந்த வார்டு, எந்த வாக்குச்சாவடியில் உள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம். மேலும் ‘உங்கள்வாக்குச்சாவடியை அறிந்துகொள்ளுங்கள்’ (Know your Polling Station) என்ற வசதியை பயன்படுத்தி, வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்தும், வாக்குச்சாவடி விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
தேர்தல் நடத்தை விதிகளின்படி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் ஏனைய பிரச்சாரங்கள் அனைத்தையும் வாக்குப்பதிவு முடிவுபெறும் நேரத்தில் இருந்து 48 மணி நேரத்துக்கு முன்பாக, அதாவது 17-ம் தேதி மாலை 6 மணிக்குள் முடிக்க வேண்டும்.
வெளியேற வேண்டும்
அதன் பிறகு, தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பில் வாக்காளர் அல்லாத, வெளியில் இருந்து அழைத்து வரப்படும் அரசியல் கட்சி பிரமுகர்கள், கட்சித் தொண்டர்கள் அனைவரும் அந்த உள்ளாட்சி பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும். அவ்வாறு வெளியேறாதவர்கள் மீது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.