Published : 15 Feb 2022 09:27 AM
Last Updated : 15 Feb 2022 09:27 AM
கோவை: அதிமுக வேட்பாளர்களை மிரட்டுவது, தவறு நடக்கும்போது காவல்துறைக்கு தகவல் அளிப்பவர்கள் மீது வழக்குப்போடுவது போன்ற செயல்களில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கொடிசியா மைதானத்தில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டு அவர் பேசியதாவது:
கோவையில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க திமுகவினர் 70 லாரிகளில் ஹாட்பாக்ஸ் கொண்டு வந்துள்ளனர். கொள்ளையடித்த பணம் எந்த ரூபத்தில் வந்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால், வாக்கை மட்டும் இரட்டை இலை சின்னத்தில் செலுத்துங்கள்.
கோவை குனியமுத்தூர், சுகுணாபுரம் கிழக்கு, கோவைப்புதூர், குளத்துப்பாளையம், இடையர்பாளையம் பகுதிகளில் கரூர், சென்னையைச் சேர்ந்த திமுகவினர் வாக்காளர்களுக்கு ஹாட்பாக்ஸ் விநியோகம் செய்யத் தொடங்கியுள்ளனர். கோவைப்புதூரில் அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் இதை தட்டிக்கேட்டுள்ளார். இதுதொடர்பாக காவல்துறைக்கும் தகவல் அளித்துள்ளார். அவரை கைது செய்து எங்கே வைத்துள்ளார்கள் என்றே தெரியவில்லை. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதில் தகவல் கூறியவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குற்றவாளிகளுக்கு காவல்துறை துணைபோகிறது. அதிமுக வேட்பாளர்களை மிரட்டுவது, தவறு நடக்கும்போது காவ்துறைக்கு தகவல் அளிக்கும் அதிமுகவினரை மிரட்டி வழக்குப்போடுவது போன்ற செயல்களில் காவல்துறையினர் ஈடுபடுகின்றனர். இதுவா காவல்துறையினர் செய்யும் வேலை? ஸ்காட்லாந்து போலீஸாருக்கு இணையாக போற்றப்படும் தமிழக காவல்துறை இன்று திமுகவின் எடுபிடியாக இருப்பது வேதனை அளிக்கிறது. காவல்துறையினர் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
மக்கள் செல்வாக்கை திமுக இழந்துவிட்டது. அதனால்தான் இந்த நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனனர். உண்மையிலேயே தில், திராணி இருந்தால் நேரடியாக அதிமுகவை எதிர்த்து வெற்றிபெற வேண்டும். அதைவிட்டுவிட்டு, குறுக்குவழியை கையாண்டு வேட்பாளர்களை மிரட்டுவது, புகார் அளிப்பவர்கள் மீது வழக்குபோடுவது என அதிமுகவை மிரட்டுவதாக நினைத்தால் எங்கள் எம்எல்ஏக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள்.
கோவை அமைதிப்பூங்காவாக இருக்கிறது. இங்கு ஏதேனும் கலவரம் ஏற்பட்டு, ஆதாயம் தேட முற்பட்டால், அந்த கலவரம் செய்பவர்களை ஓட ஓட இந்த மாவட்டத்தில்இருந்து விரட்டி அடிப்பார்கள். அதிமுகவினரை சாது என நினைக்க வேண்டாம் என்றார். இக்கூட்டத்தில் எம்எல்ஏக்கள் எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், கே.ஆர்.ஜெயராம், அம்மன் கே.அர்ச்சுனன், அமுல் கந்தசாமி, பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.பி.கந்தசாமி, செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT